Tumgik
#helofoodfever
venkatesharumugam · 4 years
Text
#HeloFoodFever
“ரவாதோசை மகாத்மியம்2”
ரவாதோசையின் அரசனான ஆனியன் ரவா இருக்கிறதே அதை வார்ப்பதே பெரிய கலை! மாவை ஊற்றி பச்சையாக நறுக்கிய வெங்காயத்தை தூவி.. இருங்க பாஸ் நீங்க எல்லாம் உண்பதே வேஸ்ட்டு. ஆனியன் ரவாவில் போடப்படும் வெங்காயம் என்பது 3 மாதக் குழந்தையை குளிப்பாட்டுவது போல! அதில் ஒரு லாவகம் இருக்கவேண்டும். தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.
பொன்னிறமான பின்பு அதை தனியே எடுத்து வைத்து விட்டு பிறகு மாவு ஊற்றி வதக்கிய வெங்காயத்தை அப்படியே மேலே பரப்பி விட வேண்டும். ஒரிரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்ப்பது சிறப்பு! வெந்த ஆனியன் பாம்புகள் போல தோசையோடு பின்னிப் பிணைந்திருக்கும். பச்சை வெங்காயம் தாமரை இலை நீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். வெங்காயம் போர்த்தியதும் ரவா பொன்னாடை போர்த்திய அரசியல்வாதியாகி முறுக்கேறிவிடும்.
அந்த முறுகலை முக்கோணமாக மடித்து எடுக்கவும். கர்நாடக ஆனியன் ரவாவில் இட்லி மிளகாய்ப்பொடி தூவுவார்கள் அது தனி ருசி, ஆனியன் ரவாவுக்கு தேங்காய் சட்னி இல்லையெனில் அதை சாப்பிடவே கூடாது! வெந்த ஆனியனோடு கொத்து கொத்தாக பொக்லைன் மண்ணள்ளுவது போல பிய்த்து தின்பவர்களாக இருந்தால் தயவு செய்து ஓரமாக ஒதுங்கி விடுங்கள். ஒரு வீணையை மீட்டுவது போல தேர்ந்த மசாஜ் கலைஞரின் மசாஜ் போல ரவாவை சாப்பிடவேண்டும்.
ஆற்றங்கரையோரம் உலா வருவது போல ஆனியன் இல்லாத விளிம்புகளை முதலில் ஓரமாக பிய்த்து சாப்பிட்டுக் கொண்டே ஆனியன் துவங்கும் பகுதிக்கு வரவேண்டும் முக்கோணமாக மடித்த ரவா மூன்றடுக்கில் இருக்கும் அந்த அடுக்குகளை தோசைக்கு நடுவில் ஆனியன் இருக்கும்படி விண்டு (சாண்ட்விச் போல) கெட்டிச் சட்னியில் நாலாபுறமும் நன்கு தோய்த்து சாப்பிடுதல் மிகச் சிறப்பு. லேயர் லேயராக இப்படி ஆனியன் ரவாவை ருசிக்கவும், சில வேளைகளில் அடை அவியல் கிடைத்தால் ரவாவிற்கு குட் காம்போ! சொதியும் கூட! இருப்பினும் தேங்காய், இஞ்சி & வெங்காயச் சட்னிகள் தான் இதற்கு சரியான இணை.
மசாலா ரவாவில் இட்லி பொடி தூவி ருசிப்பது இன்பமெனில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து அதை சாதா ரவாவிலோ அல்லது ஆனியன் ரவாவிலோ விட்டு மிளகுத்தூள் தூவி சாப்பிடுவது காமத்திலும் காணாத சுகமாகும்! இன்றும் பூண்டு மசால் ரவா,தேங்காய் ரவா, பருப்பு ரவா, தக்காளி ரவா, பாஸ்தா மசால் ரவா, மேகி மசால் ரவா என பலப்பல வெரைட்டிகள் மதுரையில் மட்டுமே கிடைக்கும், அதற்குத்தரும் எள்ளு & கேரட் சட்னி எல்லாம் வேற லெவல்!
என் ஆசான் சுஜாதா சொல்வது போல உலகின் மிகச்சுவையான ரவா தோசை எனில் அது டிரைஃப்ரூட் ரவா தான்!முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, அக்ரூட், சார பருப்பு, பாதாம், செர்ரி, ஃப்ரூட் ஜெல்லிகள் தூவிய ரவா தோசை! அந்த தோசைக்கெல்லாம் சட்னி சாம்பாரே தேவையில்லை. ரவா தோசைகளை பார்சலாக வாங்குவது அந்த தோசையை நாம் அவமானப்படுத்துவதற்கு சமம். அது திருமணத்திற்கு வாட்ஸ் அப்பில் வாழ்த்துவது போல! கல்லில் இருந்து எடுத்தவுடன் உண்பது நேரடியாக வாழ்த்துவது போன்றதாகும்!
ரவாதோசைகளை மனிதன் சுடச்சுட சாப்பிடவே இறைவன் இவ்வுலகை படைத்திருக்கிறான். அதே போல ரவா தோசையின் மீது சாம்பார் ஊற்றி சொத சொதன்னு ஆக்கி குழைத்து உண்பவர்களுக்கு சர்வ நிச்சயமாக லேட்டஸ்ட் வெர்ஷனில் நரகம் கிடைக்கும். ரவா தோசைகளை ஒரு பூவை நுகர்வது போல மென்மையாகக் கையாண்டு அதை ரசித்து சாப்பிடுங்கள். ரவாதோசை வகைகள் சுவை மிகுந்த உலகினை காட்டும் கண்ணாடி! அதை கை தவறாது கீழே போட்டு உடைத்திடாமல் பேணிக் காப்போம் ரவா தோசைகளை முறையாக ருசிப்போம்.!
(நிறைந்தது)
Tumblr media Tumblr media
0 notes