venkatesharumugam
venkatesharumugam
Think Big.. Do Smart!
3K posts
Don't wanna be here? Send us removal request.
venkatesharumugam · 5 hours ago
Text
#அரங்கனும்_ஆஞ்சநேயனும்
இந்த 2025 ஜனவரி 1 புத்தாண்டு அன்று திருச்சியில் இருந்தேன்! அன்று ஶ்ரீரங்கம் தரிசனத்துக்கு அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்து மிகச் சரியாக 4:50க்கு கோவிலுக்கு சென்றால் அம்மா மண்டம் தாண்டி சில 100 அடிகளில்.. God அரங்கனை தரிசிக்க வரும் பக்த கோடிகளை பேரி Guard அமைத்து தடுத்திருந்தனர்!
விக்ஸ் என்பதை சுற்றி சுற்றி எழுதியதைப் போல நமக்கு நேரே 500 மீட்டர் தூரத்தில் இருந்த சந்நிதிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றி நடக்கவிட்டனர்! அதிகாலை 5 மணிக்கே அவ்வளவு கூட்டம்! நான் என் வேகத்தில் நடந்து போய் க்யூவில் நிற்க தாமதமாகி 6:30 மணி தரிசனம் முடிந்தது அடுத்து 8:30க்கு தான் தரிசனம் என்றனர்!
முட்டாள் தனமாக க்யூவிலிருந்து வெளியே வந்துவிட்டேன்! அப்படியே இருந்திருந்தால் 8:30 தரிசனம் போயிருக்கலாம்! திரும்ப வெளியே வந்ததால் பரமபத பெரிய பாம்பு கொத்தியது போல மீண்டும் துவங்கிய இடத்துக்கே போய் நிற்க.. என்ன சார் 12:30 மணி தரிசனமா என்றார் நாமம் போட்ட மாமா ஒருவர்!
மணி பார்த்தேன் 7:30 என குறியீடாகக் காட்டியது! 2 கால்களிலும் ரத்தம் கட்டிக் கொண்டது போல வலி (இரண்டரை மணிநேரம் நின்றிருக்கிறேன்) புத்தாண்டில் என்னைப் பார்க்கும் வாய்ப்பை இழந்த அரங்கனை எண்ணி இரங்கினேன். வெளியேறும் போது தொண்டரடிப் பெரியாழ்வர் சந்நிதி முன் நின்று சேவித்தேன்!
அரங்கனார் ரங்கசாமியின் தரிசனம் தான் கிட்டவில்லை ஆனால் கோவிலுக்கு வெளியே வந்தால் பெரியார் ராமசாமியின் தரிசனம் கிட்டியது! அவரையும் வணங்கிவிட்டு கிளம்பினேன். நமது டிரைவர் அண்ணன் ராகவேந்திரா நகர் என்னும் இடத்தில் காரை நிறுத்தி இருந்தார்! கோவில் பக்கமெல்லாம் கார் நிற்க இடமேயில்லை!
லோக்கல் ��ட்டோ ஒன்றை கூப்பிட்டு ராகவேந்திரா நகர் என்றேன். கோவில் வாசலில் இருந்து 2 கி.மீ தூரம் இருந்த ராகவேந்திரா நகருக்கு ₹250 கேட்டார்! புது வருடம் வேறு அவருடன் பேரம் பேச விரும்பவில்லை! சரி நீங்க என்ன கூடவா கேட்கப் போறிங்க பார்த்து செய்ங்க என ஆட்டோ ஏறினேன்!
சட்டுன்னு சார் 200 கொடுங்க போதும் என்றார்! உங்க ப்ரியம்ணே நான் வேற இன்னிக்கு சாமி பார்க்கலை என்றதும் சார் 100 கொடுங்க போதும் என அதிரடியாய் கட்டணத்தைக் குறைத்து, ஆக்ஸிலேட்டரை கூட்டினார். ஆட்டோவில் பயணித்த 2 நிமிடங்களில் கார் நின்ற இடத்தில் இறங்கி 150 கொடுத்தேன்!
முகமெல்லாம் பிரகாசமாகி தேங்யூ சார் ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்து சொல்லிக் கிளம்பினார். காரில் அமர்ந்தேன் கார் கிளம்பும் போது என் கதவருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது! அதே ஆட்டோ தான்! கண்ணாடியை இறக்கினேன் சார்! இங்க பக்கத்துல சஞ்சீவன ஆஞ்சனேயர் கோவில்னு ஒண்ணு இருக்கு!
இப்போ தான் கட்டிகிட்டு இருக்காங்க! அங்க இவ்வளவு கூட்டம் இருக்காது என்றார்! ஆஞ்சநேயர் என்று காதில் விழுந்த போதே நான் சிலிர்த்து போனேன்! எப்படிப்பா போறது என்றேன்! சார் இங்கேருந்து பட்டர்ஃப்ளை பார்க் போங்க பார்க் வாசலில் இருந்து 3கிமீ தூரத்தில் மேலூர் என்னும் ஊரில் இருக்கு என்றார்!
அடுத்த 15 நிமிடத்தில் அந்தக் கோவிலில் இருந்தோம்! இன்று உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் இவர் தானாம்! நாமக்கல் நங்கநல்லூர் ஆஞ்சநேயரை விடப் பெரியவர் 51 அடி உயரத்தில் விஸ்வரூபம் மட்டுமல்ல விக்ரம் வரை இருந்தார்! உள்ளே, ராமர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், வெங்கடாஜலபதி ஆகியோரது,
சந்நிதிகள் இருந்தன! அங்கே கோவிலில் நடக்கும் திருப் பணிகளை ஆஞ்சநேயர் மாமா என்கிற வாசுதேவன் முன்னின்று செய்து வருகிறார்! எங்களுக்கு பிரசாதமும் கையில் கட்டும் ஆஞ்சநேயர் கயிறும் தந்தார்! பின்புறம் பெரிய கோசாலை ஒன்றும் இருந்தது கோவில்கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன!
37அடீ உயர சிலை பீடம் மற்றும் அடிப்புறம் அனைத்து சேர்த்து 51 அடி உயர ஆஞ்சநேயர்! இத்தனை பிரம்மாண்ட ஆஞ்சநேயரை நான் காண்பது இதுவே முதன்முறை! புத்தாண்டு அன்று திவ்யமான தரிசனம்! ஆம் அவனே என்னை அழைத்து அவனே என்னை அருள் செய்தான்! புத்தாண்டு அன்று புத்துணர்வோடு திரும்பி வந்தேன்!
🐵 அரங்கன் தராததை அனுமன் தந்தான் 🐒
Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
venkatesharumugam · 3 days ago
Text
23
இந்த 23 எனும் எண்ணுக்கும் எங்கள் RISE ADVERTISING நிறுவனத்துக்கும் ஒரு அபூர்வ பந்தமுள்ளது! ஆம் 2 வது மாதமான பிப்ரவரியின் 3 ஆம் தேதி துவங்கப்பட்டது! எந்த ஆண்டு தெரியுமா 2003!! இதெல்லாம் தானாக அமைந்தது! எந்த ஒரு திட்டமும் நாங்கள் வகுக்கவில்லை! அப்படியே ஒரு ப்ளாஷ்பேக் போலாமா! கோவை சசி அட்வர்டைசிங் தான் எங்களை விளம்பரத் துறையில் வளர்த்த நிறுவனம்!
அதன் மதுரைக் கிளையில் கிறிஸ்டோபர், ஶ்ரீசைலம் இருவரும் என்னுடன் பணியாற்றியவர்கள்! அங்கு அவர்களுக்கு சீனியர் நான் என்றாலும் நாங்கள் அப்படி எந்த பாகுபாடும் பார்க்காது ஒன்றாக இணைந்து பணியாற்றினோம்! தனியாக விளம்பர நிறுவனம் துவங்கும் ஆசையெல்லாம் அப்போது இல்லை! ஆனால் வாழ்க்கை நாம் எதிர்பாராத ஒரு சூழலை உருவாக்கி அந்தச் சுழலுக்குள் நம்மை இழுக்கும்!
அப்படி ஒரு சூழல் அமைந்தது! 7 வருடங்கள் பணியாற்றிய நிறுவனம் உடனே ராஜினாமா தந்தால் ஏற்க மாட்டார்கள் என நம்ப்ப்பி ஜனவரி 27 ஆம் தேதி ராஜினாமா கடிதம் அளித்தோம்! நாங்கள் ஹேண்டில் செய்த க்ளையண்டுகளுக்கு எங்களுக்கு பதில் வரும் புதிய ஆட்களுக்கு டிரெயினிங் தரணும், நிறுவனத்திற்கு வர வேண்டிய பேமெண்ட் எல்லாம் வசூலிக்கணும். ராஜினாமாவை ஏற்க எப்படியும் 3 மாதங்களாவது ஆகும் என்றே நினைத்தோம்!
மூன்றே நாளில் (ஜனவரி30) உங்க 3 பேருடைய ராஜினாமாவும் ஏற்கப்பட்டதென முகத்தில் சப்பென்று ஓங்கி அறைந்தது போல சொல்லிவிட்டனர்! சற்று முன் வரை சொந்தவீடு போல நாங்கள் வளைய வந்த அலுவலகம் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே போகச் சொல்லிவிட்டது! திகைத்து போய் நின்றோம்! சொந்த வீட்டை விட்டு வெளியேறும் கெளரவம் பட சிவாஜி போல, முத்து பட ரஜினி போல எங்கள் நிலை!
நாங்கள் சொந்த நிறுவனம் துவங்கும் யோசனை கூட கால் திருக் குறள் அளவு தான் இருந்தது! இப்படி திடீர்னு அனுப்புவாங்க என்றெல்லாம் நினைக்கவில்லை! அது அலுவலகமாக இருந்ததால் நாங்கள் கதறி அழவில்லை! இயல்பு நிலைக்கு வரமுடியாமல் போனாலும் ��மாளித்து முகத்தை சிரிச்சா போல வைத்துக் கொண்டு ரிலீவிங் ஆர்டரை கையால் பெற்ற விநாடி செல்போன் ஒலித்தது! என் தங்கையின் கணவர் தான்!
தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சொன்னார்! இதுவரை மனதில் கவ்வியிருந்த இருள் விலகி வெளிச்சம் வந்தது! மருமகன் பிறந்திருக்கிறான்! அப்ப புது நிறுவனமும் பிறக்கட்டும் எனது சொல்லாமல் சொல்லியது போல மகிழ்ச்���ியைத் தந்தது அந்த சேதி! அடுத்த நாள் இரவே சென்னைக்கு பஸ்ஸில் டிக்கெட் போட்டோம்! எங்கள் வளர்ச்சி மீது மிகுந்த அக்கறை சில நல்ல உள்ளங்கள் சென்னையில் இருக்கிறார்கள்!
அவர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்யத் தான் கிளம்பினோம்! அப்போதும் உடனே நிறுவனம் துவங்கும் யோசனை இல்லை! சென்னை வந்து நண்பர் இயக்குநர் ராம் குமார் அவர்களை முதலில் சந்தித்தோம்! அவர் சுப்ரமணியன் எனும் நண்பரிடம் அழைத்து போனார்! அங்கு 30 நிமிடத்தில் எங்கள் கம்பெனி துவங்கியது!ஆம்! கம்பெனிக்கு என்ன பேருன்னு சுப்பிரமணியன் கேட்டார்!
அலோ சார்! ஒரு கம்பெனி துவக்க இடத்தின் அட்வான்ஸ், பேசிக் பர்னிச்சர்ஸ், மினிமம் ஒரு கம்ப்யூட்டர், பெயர்ப் பலகை, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுன்னு ஒரு சிறிய பட்ஜெட் போட்டிருந்தோம்! அதுவே கையில் இல்லை! அதுக்குள்ள கம்பெனிக்கு பேரா?இங்க பாருங்க பணமெல்லாம் பின்னாடி ஏற்பாடு பண்ணிக்கலாம்! என்னென்ன பேரு நினைச்சு வச்சிருக்கிங்க சொல்லுங்க! பிப்ரவரி 3 ஆம் தேதி மிக நல்ல நாள்!
அன்று ஒரு பெயர் சூட்டுங்கள் பிறகு பணம் வந்தும் ஆரம்பிக்கலாம் என்றார்! நாங்க SUCCESS, SPARK, ORANGE & LEMON, RISE, ANTZ. என பெயர்களைச் சொல்ல சுப்பிரமணியன் RISE இந்தப் பேர் நல்லாருக்குப்பா! உங்க 3 பேருக்கும் செட்டாகும்! கம்பெனி நல்லா வளரும் என்றார்! 10 நொடிகளுக்கு முன்பு கம்பெனி, கம்பெனின்னு சொன்னது இப்போ RISE ADVERTISING என்று நாமகரணம் சூட்டப்பட்டு ரைஸ் ஆனது!
பிப்ரவரி 3 அன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு அதிகாலை 5 மணிக்கே போயிடுங்க! ஒரு அக்கவுண்ட் லெட்ஜர் வாங்கி அதுல கம்பெனி பேரை கோவிலில் உட்கார்ந்து எழுதுங்க பிறகு சாமிகிட்ட வச்சி ஒரு அர்ச்சனை செய்துட்டு வந்துடுங்க! அவர் சொன்னதை இம்மி பிசகாமல் அப்படியே செய்தோம்! அன்று எங்கள் கையில் பணம் சில ஆயிரங்கள் தான் இருந்தன! ஆனால் கோடிக் கணக்கில் நம்பிக்கை இருந்தது!
பணம் ஒன்றைத் தவிர எங்களிடம் கோடிக் கணக்கில் உழைப்பும், கோடிக் கணக்கில் வணிக சிந்தனையும், கோடிக் கணக்கில் க்ரியேட்டிவிட்டியும் கொட்டிக் இருந்தது! அன்று நம்பிக்கையுடன் எங்கள் நிறுவனத்திற்கு பெயர் சூட்டினோம்! இயக்குநர் ஜி.பி. விஜய் (கமல் நடித்த கலைஞன் படத்தின் இயக்குநர்) எங்கள் வெல்விஷர்களில் ஒருவர்! எங்கள் அலுவலகம் ஆரம்பிக்க போட்டு வைத்த பட்ஜெட்டை நீட்டினோம்!
�� இவ்வளவு ஆகுமா என்னால் முடிஞ்சது இதுதான்னு ஒரு சின்ன தொகையை அவர் தந்திருந்தா கூட மகிழ்ந்திருப்போம்! ஆனால்.. மொத்தத் தொகையையும் தந்து எங்களை வாழ்நாள் நன்றிக் கடனுக்கு ஆட்படுத்தினார்! நண்பர் ராம்குமார் ஒரு படி மேலே போய் முதல் சில மாதங்கள் வியாபாரம் இல்லைன்னா என்ன பண்ணுவிங்க? இதை வச்சுக்கோங்கன்னு ஒரு தொகையை தந்து எங்கள் நன்றிக் கடன் லிஸ்டில் இணைந்தார்!
மதுரை வந்து ஆடிட்டர் ஒருவரை சந்தித்து முறைப்படி இன்கம் டாக்ஸ், சர்வீஸ் டாக்ஸ் எண்கள் வாங்கி, பார்ட்னர்ஷிப் டீட் போட்டு அலுவலகம் இல்லாததால் வீட்டு விலாசத்திலேயே கம்பெனியின் பெயர் பதிந்து நிமிர்ந்தபோது கை கொடுத்த தெய்வம் எங்கள் ந.க. லிஸ்டில் வந்தார் மேலமாசி வீதி VVB ஜோதிப்பிரகாசம் அண்ணாச்சி!அவர் தான் எங்கள் அலுவலகத்திற்கு இடம் தந்த பெருமகனார்! அட்வான்ஸ் & வாடகைக்கு இடமும்..
(இன்றுவரை 23 வருஷமா அதான் ஆபிஸ்) அவ்வப்போது நல்ல ஆலோசனையும் தந்தவர்! முதல் இருமாதங்கள் ஒரு வியாபாரமும் இல்லை! சென்ற இடம் எல்லாம் சுவரில் அடித்த பந்து போல திருப்பிவிடப்பட்டோம்! எங்கள் விசிட்டிங் கார்டை மட்டும் வைத்து முதலில் வணிகம் தந்தவர் மதுரை விநாயகா ஃபர்னிச்சர் சுரேந்திரன் அண்ணாச்சி தான்! அதன் பிறகு எங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை தந்தது போத்தீஸ் தான்!
போத்தீஸ் முருகேஷ் அவர்கள் இல்லாமல் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை எண்ணிக்கூட பார்க்க முடியாது! தங்கமயில், ராஜ்மஹால் இந்த இரு நிறுவனங்கள் தான் எங்களது முன்னாள் சசியின் க்ளையண்டுகள்! தனித்து நாங்கள் வந்தது அவர்களுக்கு தெரியும் என்றாலும் சசியுடன் இருந்த ஒப்பந்தம் காரணமாக எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை! வெளியே வந்து நாங்கள் நன்கு இயங்கி வருவது தெரிந்து எங்களை அழைத்தனர்!
அதன் பிறகு துவங்கியது எங்கள் காலம்! கடின உழைப்பு, வித்யாச சிந்தனைகள் எல்லா இடங்களிலும் எங்களை மேலே தூக்கி நிறுத்தியது! அனைவரையும் மதித்தோம், எவரையும் பாராட்டத் தவறாமல் இருந்தோம், திறமைக்கு வாய்ப்பளித்தோம், கால்களில் நடக்கப் பழகினோம் சாதனைகள் எல்லாம் அதுவாக நிகழ்ந்தது! விளம்பர உலகம் எங்களைப் புகழ்ந்தது! அதனை தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை!
அடுத்த வேலைக்கு ஆயத்தமானோம்! எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் பதில் தந்து கொண்டிருந்தோம்! மதுரையை தொடர்ந்து சென்னையில் கிளை துவக்கினோம்! 23 வருடங்களுக்கு முன்பு சென்னையில் அலுவலகமே இன்றி எந்தச் சாலையில் நின்று செய்வதறியாமல் திகைத்தோமோ பின்னாளில் அதே சாலையில் சென்னைக் கிளையை திறந்தோம். பிறகு கோவை! எங்கள் வணிகம் வளர்ந்தது நாங்களும் அதோடு வளர்ந்தோம்!
இதோ இன்ற��� போத்தீஸ், தங்கமயில் இரு நிறுவனங்கள் மட்டும் கிட்டத்தட்ட 100 கிளைகள் வந்துவிட்டது! அவர்களோடு சேர்ந்து நாங்களும் வளர்ந்திருக்கிறோம்! இதெல்லாம் போக ஈவண்ட்/ வெட்டிங் மேனேஜ்மெண்ட் துவக்கி அதிலும் சாதித்தோம்! சாதிக்க இருக்கிறோம்! 22 வருடங்களுக்கு முன் அதிகாலை இருளில் வடிவுடையம்மன் கோவிலுக்கு போனது இன்றும் நினைவிலுள்ளது! ஆம் நாங்கள் ஏறி வந்த ஏணியை மறக்கவில்லை!
23 கடந்து இன்னும் சாதிப்போம் 💖💖
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 6 days ago
Text
#தெரு_விளையாடல்கள்
இன்று தெருக்களில் பிள்ளைகள் விளையாடுவது என்பது ரொம்ப அபூர்வம்! தொலைக்காட்சிகள் நம் வாழ்க்கையை ஆக்ரமிக்காத முற்பகுதி 80ஆம் ஆண்டுகளில் மாலை 4 மணிக்கே தெருவில் பிள்ளைகளின் ஆரவாரமும், மகிழ்ச்சி கூக்குரலும் இரைச்சலாக எதிரொலிக்கும்! விளையாடுவதற்கு அத்தனை விளையாட்டுகள்!
கில்லி, கோலி, பம்பரம், நுங்கு வண்டி போன்ற ஆட்டங்கள் களை கட்டும். டயர் உருட்டுவது போல பட்டறைகளில் உபயோகமின்றி தூக்கியெறியும் அரையடி உயர இரும்பு வளையத்தையும் அதை உருட்டிச் செல்ல முனையில் U வடிவத்தில் வளைந்த நீண்ட செல்ஃபி ஸ்டிக் போன்ற கம்பியும் வைத்து விளையாடுவோம்!
அதுவும் நூங்கு வண்டி போலத் தான்! ஆனா கொஞ்சம் காஸ்ட்லி 5 ரூபாய் தேவைப்படும்! ஆக்கர், அபிட் எடுத்து ஆடும் விதவிதமான பம்பர ஆட்டமும் அன்று பரபரப்பானது! பம்பர ஆட்டம் பற்றி நான் தனிப்பதிவே எழுதி இருக்கிறேன்! அடுத்ததாக கோலி! எலந்தைப் ப��ம் முதல் பெரிய நெல்லிக்காய் சைஸில் வண்ண கோலிகள்!
சோடா பாட்டிலுக்குள் இருக்கும் நீல கோலி போன்ற சிங்கிள் கலர் கோலிகள் முதல் கலைடாஸ் கோப்பின் டிசைன்கள் போல அல்லது ஓவியனின் பேலட் போர்டு போல கோலியின் கண்ணாடி மேனிக்குள் தெரியும் பலவண்ணங்களே அத்தனை அழகு! கோலி மீது இன்னொரு கோலியைக் கொண்டு அடிக்க வேண்டும்!
கட்டை விரலை தரையில் ஊன்றி நடு விரலின் முன்புறம் கோலியை வைத்து விரலை முடிந்த வரை பின்புறம் வளைத்து குறிபார்த்து எதிரே உள்ள கோலியை அடித்து தள்ளிக்கொண்டே போக வேண்டும்! நமது பவரை காட்ட இழுத்து சுண்டும் போது எதிரே இருக்கும் கோலி அடி பொறுக்காமல் நொறுங்கிவிடும்!
தன்வினை தன்னைச் சுடும் என்பது போல சில நேரம் நமது கோலியே உடைந்து போகும்! விரலால் சுண்ட சிறிய கோலிகள். பெரிய குழிக்குள் இருக்கும் கோலிகளை அடித்து வெளியே கொண்டு வர நெல்லிக்காய் சைஸ் கோலி வேண்டும்! அதை குறி பார்த்து மலிங்கா அல்லது பதிரனா போல குழியில் எறியவேண்டும்!
கில்லி கொஞ்சம் டேஞ்சர்! சொந்தமா கில்லியும் தாண்டலும் வைத்திருந்தால் அவன் கில்லியில் பெரிய ப்ளேயர். நாங்கள் அடித்த கில்லிகள் 50 குண்டு பல்புகள், 10 தெரு விளக்குகள், 20 ஜன்னல்கள், 10 சுவர் கடிகாரங்களை உடைத்திருந்தது! இந்தச் சாதனை விஜியின் பாட்டி மண்டை உடைந்த அன்று முடிந்தது!
விஜி என்கிற விஜயகுமாரின் பாட்டி மீதான மரியாதைனு உலகம் நினைத்தாலும் விஜியின் சகோதரி மீனா.. வேண்டாம் தெரு விளையாட்டுக்கு வருவோம்! அடுத்து பட்டம்! ஒரு ரூபாய்க்கு அப்போது அழகழகான வண்ணப் பட்டங்கள் கிடைக்கும்! 50 காசுக்கு இன்றைய A4 பேப்பர் சைசில் வாலுடன் கிடைக்கும்!
பெரிய பட்டம் 1 ரூபாய் பாதி நாளிதழ் சைசில் இருக்கும்! ஒரு ரூபாய் அன்று பெரிய பாக்கெட் மணி! வசதியுள்ள யாராவது பட்டம் வாங்கினால் அதைப் பார்த்து நியூஸ் பேப்பரில் பட்டம் செய்வோம்! சீன தயாரிப்புகள் எல்லாத்துக்கும் நாங்கதான் முன்னோடி!அதன் சூத்திரம் தெரியாது செய்யும் பட்டம் பறக்கும் முன்பே கிழிந்திடும்!
பறக்கும் விமானம் கண்டுபிடிக்க ரைட் சகோதரர்களே 117 முறை முயன்றபோது நாம் துவளலாமா 58வது முயற்சியில் நாங்க செய்த பட்டம் தரையிலிருந்து 6 அடி உயரத்தில் 16 விநாடிகள் பறந்து வீழ்ந்தது! அதன் பின்பு சரியான சூத்திரத்தில் பட்டம் செய்து பறக்கவிட்ட போது ரைட் பிரதர்ஸ் அளவுக்கு கொண்டாடினோம்!
பட்டம் கூட ஈஸி! அதுக்கு நூல் வாங்க பட்ஜெட் இருக்காது! எங்கடா இங்க இருந்த பச்சை நூல்கண்டை காணோம்னு டைலர் மிஷின் வைத்திருக்கும் வீட்டிலிருந்து ஒரு அக்கா கத்தும் ஒலி தெருவில் கேட்கும்! அடுத்தடுத்த ஆண்டு��ளில் நாங்களே பெரிய பட்டம் செய்யும் டெக்னாலஜியை கற்று போரடித்து கைவிட்டோம்!
பொருட்கள் இல்லாத விளையாட்டுன்னா ஓடி பிடித்து ஆடுவது, கண்ணா மூச்சி, திருடன் போலீஸ், பச்சக்குதிர, சிகரெட் அட்டைகளை கல்லால் அடித்து நகர்த்துவதுன்னு ஏராளமான ஆட்டங்கள்! கொல கொலயா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ.. எல்லாம் பெண் பிள்ளைகளின் ஆட்டங்கள்!
ஃப்யூஸ் போன பல்பில் நீர் நிரப்பி அதை சூரிய ஒளியில் காட்டி அதன் எதிரே வெள்ளைத்துணி கட்டி சினிமா பிக்சர்களை போட்டு அன்றைக்கே ஃபிலிம் காட்டியிருக்கிறோம்! லேத்தில் பம்பர ஆணி அடித்தது, வளையம் தள்ள கம்பி வாங்கி வளைப்பது, பட்டம் செய்வது என எங்கள் டெக்னிக்கல் ஸ்கில்லும் நன்கு வளர்ந்தது!
ஹாக்கி, கிரிக்கெட், ஃபுட்பால், ஷட்டில், டென்னிஸ், செஸ், என ஏராளமான ஆட்டங்கள் இன்றைக்கு உள்ளன! சம்மர் கோச், ஸ்பெஷல் கோச் தாண்டி பிரத்யேக அகாடமிகள் வந்துவிட்டன! ஆனால் அன்று தெருவில் ஆடிய விளையாட்டுகளுக்கு இணையாக இன்று எந்த ஒரு விளையாட்டும் இல்லையென்பதே உண்மை!
🧚‍♂️ இதில் இல்லாத விளையாட்டுகளை நீங்களும் சொல்லலாம்🏌️‍♀️
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
venkatesharumugam · 6 days ago
Text
#குதிரை_வண்டி
அறிவியலும், விஞ்ஞானமும் வளர வளர நம்முடன் இருந்த பல விஷயங்கள் அடியோடு மாறியிருக்கும்! அல்லது வழக்கொழிந்து போயிருக்கும்! கையால் கடைப் பெயர்ப் பலகைகள் வரையும் ஓவியங்கள் எனும் தொழில் ஃபிளக்ஸ் ஃபேனர் வந்த பின்பு முற்றிலும் மாறியது ஒரு உதாரணம்! தூத்துக்குடி சாந்தா ஆர்ட்ஸ் கையால் வரைந்த போர்டுகளெல்லாம் அப்படியே தத்ரூபமாக புகைப்படம் போலவே இருக்கும்!
இப்போது அப்படி வரையும் ஆட்களில்லை என்பதை விட அதற்கு நேரமில்லை! காலை 9 மணிக்கு டிஸைன் செய்ய ஆரம்பித்து 10 மணிக்கு பிரிண்டிங் போய் 11 மணிக்கு கடையில் போர்டு மாட்டப்பட்டுவிடும்! ஆனால் கையால் வரைவது அப்படியல்ல குறைந்தது 1 வாரம் 10 நாட்கள் தேவைப்படும்! இப்படி காலத்தில் கரைந்தது தான் குதிரை வண்டியும்! கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்கது!
இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு 1880களில் துவங்கிய குதிரை வண்டியின் பாரம்பரியம் 1990 வரை நல்ல உயிர்ப்புடன் இருந்தது! மோட்டார் வாகனங்களின் புழக்கத்துக்கு பின்பு சிறிது குறைந்து, வாடகை டாக்ஸி வந்தபின் மேலும் குறைந்து ஆட்டோ வந்த பின்பு அடியோடு குறைந்து போனவை தான் இந்தக் குதிரை வண்டிகள். 70களில் பஸ் / ரயில் நிலையங்களின் வாயிலில் குதிரை வண்டி ஸ்டாண்ட்டுகளை பார்க்கலாம்.
வைக்கோல், பசும்புல் வாசனை, குதிரைச் சாணம் எல்லாம் கலந்து அந்த மணத்திலேயே ஸ்டாண்ட் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்! குதிரையின் கண் பட்டை, அதன் முதுகில் கட்டும் தோலால் ஆன சேணம், கடிவாள பெல்டுகள் எல்லாம் அங்கு மாட்டியிருக்கும்! சில இடங்களில் கழுகின் குரலை மிமிக்ரி செய்து குதிரைகள் கனைக்கும் ஒலியும் கேட்கும்! சிமெண்ட் தொட்டிகளில் நீர் இருக்கும், புட்டபர்த்தி சாய்பாபா தலை முடி போல..
பரந்த கோரைப் புற்கள், கட்டுக் கட்டாக வைக்கோல்கள், கொள்ளு, தவிடு மூட்டைகள், லாந்தர் விளக்குகள், சாட்டைக் கம்புகள், பழுதடைந்த குதிரை வண்டிச் சக்கரங்கள், சக்கரத்தை சுற்றியடித்து பழுதடைந்த கழண்டு போன இரும்பு ரிம்கள் எனக் குவிந்திருக்கும்! வண்டிக்காரர்கள் அதை லாயம் என்பார்கள்! குதிரைகளை கட்ட கல்லால் ஆன கம்பங்கள் இருக்கும்! இரவில் வண்டியை கழட்டி சாய்த்து வைத்துவிடுவார்கள்.
குதிரை வண்டி முன் பக்கம் ஒற்றை மாட்டுவண்டி போலவே இருக்கும்! நுகத்தடியில் குதிரையைப் பூட்டியிருப்பார்கள்! பின் பக்கம் வில் போல வளைந்த கூண்டு போன்ற வண்டி அப்படியே எஸ்கிமோக்களின் இக்ளூ வடிவில் இருக்கும்! உள்ளே 3 நபர்கள் தாராளமாகவும் 5 நபர்கள் நெருக்கியும் அமரலாம். நாம் வண்டி ஏறும் போது வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்தும், இறங்கும் போது குதிரைக்கு அருகேயும் நின்று பேலன்ஸ் செய்வார்!
வண்டியில் அமரும் பகுதியில் புற்கள் அல்லது வைக்கோல் போட்டு மேலே கோணி விரித்திருப்பார்கள்! மெத்துனு உட்காரலாம் என்றாலும் சிறிது நேரத்தில் பின்னால் புல் குத்தும்! வண்டியில் ஒவ்வொருவராக ஏற வேண்டும் குதிரை வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்து முன்னால வாங்க முன்னால வாங்கன்னு நாம் முன்னேற வரவேற்பார்! வண்டியின் பின்புறம் கால் வைத்து ஏற கீழே படி போல (Foot ரெஸ்ட்) சதுர பலகை இருக்கும்!
அதில் கால் வைத்து ஏறவேண்டும்! வண்டிக்கு முன்னே பக்க வாட்டில் கால் வைத்து ஏற இதே போல ஒரு சிறு பலகையும் உண்டு! இளைஞர்கள் சற்று பெரிய சிறுவர்கள் ஏறலாம். குதிரை வண்டிப் பயணம் ஸ்லோ சைக்கில் ரேஸ் போல ஆனால் குதுகலமாக இருக்கும்! முன்பக்கம் வண்டிக்காரருடன் அமரும் போது கால்களை கீழே தொங்கவிட முடியாது! குதிரையின் பின் பகுதி நம் கால்களிலும் உரசும். வண்டிக்காரர் சாட்டைக்கம்பு வைத்திருப்பார்.
குதிரையை விரட்ட அதனை சுழட்டுவார்! அவ்வப்போது அந்த சாட்டை நம்மையும் தீண்டும்! சில நேரம் குதிரை நகராது முன்னும் பின்னும் இழுக்கும் அப்போது சுளீர் சுளீர்னு நம்ம ‘அண்ணா’ போல குதிரை மீது சாட்டையை சுழற்றுவார்! சில நேரங்களி��் குதிரைகளுக்கு அது வலிக்காமல் இன்னும் நல்லா அடி என்பது போல நிற்கும்! சில நேரம் வேகமெடுத்து ஓடும்! பயணங்களில் குதிரை வண்டி நன்கு குலுங்கும் என்பதால்..
நீண்ட தூர குதிரை வண்டிப் பயணம் உடல் வலியைத்தரும்! நகரத்தை விட்டு சற்று வெளியே வந்துவிட்டால் வண்டிக்காரர் சாட்டைக் கம்பை வண்டி சக்கரத்தின் ஊடே வைக்க டக டக டகவென எழும்பும் ஒலி கேட்டு அதிர்ந்து குதிரை வேகமாக ஓடும்! அவ்வப்போது ஹை, ஹை, டுர், டுர்ரா, என வண்டிக்காரர் எழுப்பும் ஒலி தான் ஆக்ஸிலேட்டர்! வண்டிக்காரர் ஓரமா போ, வழிவிடு சார் என கத்துவதும் டகடக ஒலியும் தான் குதிரை வண்டியின் ஹாரன்!
குதிரை வண்டிகளுக்கு ரிப்பேர் பார்க்கும் கொல்லன் பட்டறைகள், குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் இடம், புல், வைக்கோல் விற்கும் இடம் போன்றவை இருக்கும்! இன்று நாம் பயணம் செய்யும் ஆட்டோ பெட்ரோல் பங்க் போவது போல அன்றைக்கு புல் வாங்குமிடம், லாடம் அடிக்குமிடம் என்று வண்டியை நிறுத்துவதும் உண்டு! நிற்கும் குதிரைக்கு லாடம் அடிப்பதை எல்லாம் இன்றைய கிட்ஸ் பார்த்திருக்க மாட்டார்கள்!
குதிரை வண்டியில் எல்லாரும் அமர்ந்ததும் பின்புறம் செக்போஸ்ட்டில் குறுக்கே உயர்த்தும் கம்பு போல ஒரு முனையில் கொக்கி போல வளைந்த கம்பி இருக்கும். அந்த கொக்கியை எதிர் முனையி���் உள்ள வளையத்தினுள் லாக் செய்துவிட்டால். யாரும் விழ மாட்டார்கள்! அதைப்பிடித்துக் கொண்டே பாதுகாப்பாக பயணம் செய்யலாம்! சில வண்டிகளின் முன்னும் பின்னும் படுதாக்கள் இருக்கும்! மழையிலிருந்து நம்மை காக்க!
குதிரை வண்டிக்கு வாடகை 50 பைசா 75 பைசான்னு கேட்பாங்க டவுனில் இருந்து வீடு வர 5 பேருக்கு அதிக பட்சம் 1.25 ரூபாய் தான் ஆகும். வண்டி அடியில் வயிற்றுப் பகுதியில் சாக்குப் பை கட்டி அதில் வைக்கோல் புல்லை லோடு செய்திருப்பார்கள். அங்கு ஒரு இரும்பு வாளியும் தொங்கும்! வீட்டில் நம்மை இறக்கிவிட்ட பின்பு கொஞ்சம் குதிரைக்கு தண்ணீர் கிடைக்குமான்னு பணிவா கேட்பாங்க அதுக்குதான் அந்த இரும்பு வாளி!
மனுசன் குடிக்கிற தண்ணியே காசுக்கு விற்குற காலம் இது! ஆனா அன்னிக்கு குதிரைக்கெல்லாம் தண்ணி தரும் அளவு நம்மிடம் நிறைய தண்ணீர் வசதியும் இருந்தது நல்ல மனசும் இருந்துச்சு! குதிரைகளை சாட்டையால் அடிச்சா கூட பாவம் அடிக்காதிங்கனு அன்பு காட்டின நம்ம மக்கள் இன்னிக்கு நடுரோட்டில் மனுசனை அடிச்சாகூட நின்னு மொபைலில் படம் எடுத்துகிட்டு இருக்காங்க! எங்க போச்சு அந்த மனித நேயம்?! ஆச்சரியமா இருக்கு!
மக்கள் விலங்குகளை தம்முடனே வளர்த்த போது இருந்த அன்பும், அக்கறையும் இந்த அறிவியல் காலத்துல குறைஞ்சிருக்கு! குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்லாம் காலத்தால் அழியாதவை? இன்னும் தமிழ்நாட்டில் குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருக்குற ஊரு பழனி! இன்றும் அங்க குதிரை வண்டி ஸ்டாண்ட் கூட பார்க்கலாம்! என்ன த��ன் வழக்கொழிஞ்ச விஷயம்னு இருந்தாலும் சில சாகாவரம் பெற்ற விஷயங்களும் இருக்குன்னு சொல்லுவாங்க..
ஆமா! அதில் இந்தக் குதிரை வண்டியும் ஒண்ணு 🐴
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
venkatesharumugam · 6 days ago
Text
#வேலண்டைன்_டே
சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வேழமலை என்ற மலை நாட்டில் ஒரு வேலவன் கோவில் அமைந்திருந்தது. அம்மலையின் அரசன் தான் சீர்வேலன்! கூர்வேல் கொண்டு பகையறுக்கும் சீர்வேலன் என்று அவனை கபிலர் மட்டுமல்ல வேம்புலியும் பாடிய பெருமையுடையவன்! ஒரு முறை காட்டுக்குள் அவன் வேட்டைக்கு சென்ற போது ஒரு இளம் ஜோடிகள் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்ததைப் பார்த்தான்!
உடனே அவர்களை மீட்டு விசாரிக்க அது மலைக்கு கீழே உள்ள தேசத்து மன்னனின் மகன் என்றும் அந்தப் பெண் அவனது காதலி ஆனால் ராஜ குலம் அல்ல என்பதும் தெரிந்தது! நாடாளும் மன்னர் மகன் என்று தெரிந்தும் அஞ்சாமல் சீர்வேலன் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து பகைவர்கள் எளிதில் நெருங்க முடியாத வேழமலையின் உச்சியில் அவர்களை குடியமர்த்தினான்!
மகனின் திருமணத்தைப் பற்றி அறிந்ததும் சினத்துடன் மலையை நோக்கி படையெடுத்து வந்த மன்னனின் படையை மலை மீதிருந்து சமயோஜிதமாக அம்புகள் எய்தி, மலைப் பாம்பு, உடும்புகளை வீசி, பெரிய பாறைகளை உருட்டி விட்டு கதறி சிதறி ஓடச் செய்தான் வேலன்! இந்தச் செய்தி உலகம் முழுவதும் அமெரிக்க காட்டுத்தீ போல பரவ காதலர்கள் எல்லாம் வேழமலை நோக்கி குவிந்தனர்!
வேலனும் வந்த ஜோடிகளை தீர விசாரித்து மெய்யான காதலர்களை மட்டும் அங்கே அனுமதிப்பான்! பின்னர் அவர்களுக்கு உடும்புக்கறி சமைத்து கறிக் களி உருண்டை செய்து (களிக்குள் கறி) விருந்து பரிமாறி அவர்களை வேழமலை உச்சிக்கு குடியேற அனுப்புவான்! அந்த வேழமலை முழுவதும் காதலர்களின் மலையானது! அங்கு காதலர்கள் பெருகியது போல வேலனுக்கு எதிரிகளும் பெருகினர்.
ஆனால் கீழிருந்து மலைமீது படையெடுத்து வேலனை வெல்வது மாமன்னர்களாலேயே முடியாமல் போன வரலாறு இருந்தது! வேலனை வஞ்சகத்தால் வீழ்த்த நினைத்தனர்! அவர்களே முழு பயிற்சி தந்து ஒரு போலியான காதல் ஜோடியை அவனிடம் அனுப்ப வேலனும் அவர்களை வரவேற்று அவர்களுக்கு திருமணமும் நடத்தி மலை உச்சிக்கு அனுப்ப.. அந்தத் திருமணத்தின் மறுநாள் அந்த ஜோடி..
அண்ணே 8 வகையான காடை, போன்லெஸ் கவுதாரி, காட்டுக் கோழி வருவல், காட்டாற்று கெண்டை மீன் குழம்பு, திணை, தேன், எல்லாம் உங்களுக்காவே நா��்க சமைச்சிருக்கோம் என்று வேலனை தங்கள் வீட்டில் விருந்துக்கு அழைத்தனர்! என்னடா இந்த ஆட்டம் புதுசா இருக்கேன்னு உணராது அந்த ஜோடியின் வீட்டுக்கு சென்ற வேலனை அந்த ஜோடி உணவில் நஞ்சை கலந்து கொடுத்து கொன்றனர்!
அங்கு குடியேறி இருந்த மற்ற ஜோடியினர் இதை கண்டறிந்ததும் துரோகம் செய்த இருவரையும் மலையில் இருந்து தள்ளி கொன்றனர்! காதலர்களை சேர்த்து வைக்க தன் வாழ்வையே தியாகம் செய்த வேலனின் இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாட அங்கிருந்த அனைவரும் முடிவெடுத்து கொண்டாட ஆரம்பித்தனர்! இந்த நாளை அவர்கள் வேலன் டே என்று கொண்டாடி வந்தனர்! பின்னாளில்..
நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆதிக்கம் வந்தபிறகு அந்த வேலன் டே தான் வேலண்டைன் டே என்று மாறியது!
இதெல்லாம் நம்மில் எத்தினி பேருக்கு…
💖💖 வாழ்க காதல் 💚💚 வாழ்க தமிழ் மாமன்னன் சீர்வேலன் 💖💖
1 note · View note
venkatesharumugam · 7 days ago
Text
#அம்மாவின்_சமையல்_பேச்சு
பேச்சிலேயே சமையல்னா “வாயில வடை சுடுறதான்னு நீங்க கேட்பது எனக்கும் கேட்கிறது! பொதுவா அவன் நல்லா அல்வா கிண்டினான்பா.. என்னய்யா இப்படி போட்டு வறுக்குற.. யப்பா கடலை கருகுது.. வேணாம் என் வாயைக் கிளறாதே போன்ற சொற்றொடர்கள் எல்லாம் நமது வாய் பேச்சைக் குறிப்பவை!
ஒரு நல்ல சமையலைச் செய்து அதை திருப்தியாக சாப்பிட்ட உணர்வை சிலர் தங்கள் பேச்சில் வரமாக வாங்கி வந்திருப்பார்கள் அப்படி வரம் வாங்கி வந்தவர்களில் எங்க தனம் அம்மாவும் ஒருவர்! அம்மாவின் கைமணத்திற்கு இணையானது அவரது பேச்சு மணம்! அம்மாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது! ஒருபோதும் அவர் அதை..
பெரும் குறையாகக் கருதியதில்லை! அம்மாவிற்கு இயல்பிலேயே நல்ல க்ரியேட்டிவிட்டி! அவர் பார்த்த ஒரு சம்பவத்தை சிரிக்க சிரிக்க நல்ல உவமைகளுடன் விவரித்துக் கூறும் தனம் FM பேச்சைக் கேட்க அக்கம் பக்க நேயர்கள் அன்றே ஏராளமானோர் இருந்தனர்! அம்மாவின் சமையல் பற்றிய பேச்சுக்கு வருவோம்!
யாராவது ஒரு சமையல் செய்முறை கேட்டால் நாம் அதை சொல்வதற்கும் அம்மா சொல்வதற்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கும்! இப்படியெல்லாம் சொல்ல முடியுமான்னு வியக்கவும் ரசிக்கவும் வைத்திடுவார்! தாளிக்க நிறைய எண்ணெய் ஊற்று என்பதை சட்டியில ‘நல்லா சளசளன்னு எண்ண ஊத்து’ என்பார்.
கடலை பருப்பு, வரமிளகா, மல்லி, மிளகு போட்டு நல்லா வாசம் வர்ற மாதிரி வறுக்கணும், கடல வாசம் கமகமன்னு வரணும், மல்லி வறுபடுற வாசம் வாசப்படி தாண்டி வீசணும், இந்த மிளகா காரலா நெடியடிக்ககூடாது என்று அவர் விவரிக்கும் போதே ஹட்ச் என்றோ ஏர்டெல் என்றோ நமது மூக்கில் ஒரு தும்மல் வரும்! ஆம்!
வறுக்குற இடத்தில் நாமும் இருப்பது போல அந்த நெடி நமக்குள் ஏறும்! கறியை நல்ல இறுக்கமா, கெட்டியா வதக்கணும் என்பதை அம்மா கறியில இருக்க தண்ணி வத்த நல்லா சுருளச் சுருள வதக்கணும்டி என்பார்! அவர் சொல்வதே அழகாக இருக்கும்! மல்லிகைப்பூ போல, பஞ்சு போல இட்லி நமக்கு நல்லா தெரியும்!
அம்மா மென்மையான இட்லியை நல்லா திர்னவேலி அல்வா மாதிரி இட்லி என்பார்! அல்வா மாதிரி இட்லி கரகரன்னு காராபூந்தி போல சட்னி என்னும் அவரது உவமை எங்க வீட்டில் பிரபலமான ஒன்று! அப்பா ஸ்வீட் மாஸ்டர் என்பதால் இந்த உதாரணங்களை அம்மா சொல்லியிருக்கலாம்! அதிலும் அவர் க்ரியேட்டிவ் மின்னும்!
கொழம்பு கொதிச்சதும் இறக்கி வச்சி உள்ளங்கை நெறைய மல்லித்தழைய எடுத்து கொரங்கு மாலைய பிச்ச மாதிரி பிச்சு போடு என்பார்! பிச்சு போடு ஓகே ஆனா அங்கும் குறும்பாக ஒரு குரங்கு வந்து குதித்திடும்! நல்லி எலும்பு கொழம்பு வச்சா பாவாட கழண்டா மாதிரி கறி எலும்பிலிருந்து கழண்டு விழணும் என்பார்!
நெஞ்செலும்பு கறியின் சவ்வு போன்ற மென்மையான எலும்பை தேங்காய்சில்லு மாதிரி கரிச்னு இருக்கும் கடிச்சு சாப்பிடுனுவார் குழைந்த சோறை அம்மா ‘நல்லா கெட்டித் தயிர் போல சோத்தை வடிச்சு வச்சிருக்கேன்யா எனும் போது எனது வியப்பு இன்னும் அதிகரிக்கும்! எப்படி இதெல்லாம் இவருக்கு இயல்பா வருதுன்னு!
சட்டியில நல்லெண்ணெய் ஒரு கரண்டி ஊத்தி 10 உரிச்ச சின்ன வெங்காயம், 4 பச்ச மொளகா கீறிப் போட்டு நல்லா பொன்னா (தங்கநிறம்) வறுத்துட்டு 2 துண்டு கருவாடு போட்டுன்னு அம்மா சொல்லும் போதே வாயில் இருந்து 2 சொட்டு உமிழ்நீர் கூட சொட்டலைன்னா அவன் மனிதப் பிறவியே இல்லை எனலாம்!
சப்பாத்திக்கு அம்மா சொல்லும் ஒரு உதாரணம் “உங்கப்பா சப்பாத்தி சுட்டா மட்டும் தண்ணியில நனைச்ச பேப்பர் மாதிரி சப்பாத்திய ஈசியா பிய்க்க வருது நாம சுட்டா துணிய பிச்ச மாதிரி இருக்குனு! அம்மாவின் இந்த உவமை எத்தனை ரசனை மிகுந்தது என்பதை ஆழ்ந்து கவனித்தால் புரியும்! அவ்வளவு அர்த்தமிருக்கும்!
கெட்டி சாம்பாருக்கு அம்மா சொல்லும் உவமை இலையில நத்தை மாதிரி சாம்பார் ஊர்ந்து வரணும் என்பார்! அம்மாவின் பேச்சில் தான் எத்தனை அழகியல் ! பாட்டி, மாமா, சித்தி, அப்பா, அண்ணன் தம்பி என ஒரு பெரிய சமையல் குடும்பத்தில் பிறந்தது நான் பெற்ற பாக்கியம்! ஆம்! என்றென்றும் எனது நினைவில் மணக்கிறது..
🥘 தனம் அம்மாவின் சமையல் பேச்சு 🥘
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 8 days ago
Text
#ஆஞ்சநேயர்
நமது குலதெய்வம், பொதுவான பிரபல கோவில்களின் தெய்வம் என்பதை எல்லாம் தாண்டி நமது இஷ்ட தெய்வம் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வ நம்பிக்கை இருக்கும்! அப்படி எனக்கொரு இஷ்டமான தெய்வம் ஆஞ்சநேயர்! எனது வாழ்வின் இருள் படர்ந்த சிக்கலான பல தருணங்களில் ஒளியாக வந்தவர்!
3 வேளை உணவே கடினம் என்கிற வறுமை காலத்தை வளமான காலமாக மாற்றியவர் ஆஞ்சநேயர்! ஆம் 90களில் மேடை நிகழ்ச்சிகள் செய்த போது அங்கொன்றும் இங்கொன்றும் கிடைத்த மேடை வாய்ப்புகளும் அதில் கிடைத்த சொற்ப பணமும் அற்பமாக இருந்தாலும் ஒரு வேளை பசியையாவது போக்கியது!
இந்தச் சூழலில் நாமக்கல்லில் ஒரு மேடை நிகழ்ச்சி வாய்ப்பு தேடி வந்தது! ஆம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் விழா நிகழ்ச்சி அது! நிகழ்ச்சியன்று காலையே நாமக்கல் வந்துவிட்டோம்! எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்! விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார் மேற்கூசரை இல்லா அக்கோவிலில்!
பார்த்ததும் மெய் சிலிர்த்தது! அவரை பயபக்தியுடன் வணங்கி பின் கோவில் அருகே அமைத்த மேடையில் மாலை நிகழ்ச்சியைத் துவங்கினோம்! அன்று எங்கள் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பும் கைத்தட்டல்களும், பாராட்டும் அதற்கு முன்பு நாங்கள் கேட்டதே இல்லை! இந்த நிகழ்ச்சியே எங்களுக்கு புகழ் வெளிச்சம் தந்தது!
அந்த நிகழ்ச்சிக்கு பின்பு நாமக்கல், திருச்ச���ங்கோடு, ஈரோடு, பவானி, சேலம், கரூர் என அனைத்து ஊர்களிலும் எங்கள் கால் படாத கிராமங்களே இல்லை எனும் அளவுக்கு நிகழ்ச்சிகள் குவிந்தன! தொடர்ந்து 5 ஆண்டுகள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தோம்! டிவி சினிமா வாய்ப்புகளும் எங்களைத் தேடி வந்தன!
எல்லாம் எங்கள் திறமை தான் என்றாலும் அதற்கு ஆஞ்சநேயரின் அருளும் இருந்ததாக தீவிரமாக நம்பினோம். நாமக்கல் வழியாக வேறு ஊர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் கோவிலுக்கு சென்று அவரை சேவித்துவிட்டே கிளம்புவோம். நாங்கள் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு விசேஷ நாட்களாக அமைந்துவிடும்!
திடீரென நாங்கள் போகும் நாளில் ஆஞ்சநேயர் முத்தங்கியில் இருப்பார், அல்லது சந்தன காப்பில் இருப்பார், அல்லது 10008 வடை மாலை சூடியபடி அருள் புரிவார்! எப்படி விசேஷ நாளன்று கரெக்டா வர்றிங்க யாரும் சொன்னாங்களா என கோவிலில் கேட்பார்கள்! அப்படி ஏதுமில்லை எல்லாமே தற்செயல் தான்!
இதனால் அவர் மீதான எங்கள் நம்பிக்கை இன்னும் அதிகரித்தது! மீனாட்சியம்மன் கோவிலிலும் முக்குறுணி விநாயகர் சந்நிதி வழியாக சுவாமி சந்நிதி திரும்பும் இடத்தில் தூணில் இருக்கும் ஆஞ்சநேயரை தேடிப் போய் வழிபடுவோம்! அவரை வழிபடும் அன்று ஏதாவதொரு நல்ல செய்தி அல்லது வாய்ப்பு நிச்சயம் வரும்!
ஏதாவது ஒரு பிரச்சனையில் கலங்கி நிற்கும் போதோ அல்லது முடிவு எடுக்கமுடியாத குழப்பத்திலோ திடீரென யார் மூலமாவது அவர் பெயர் உச்சரிக்கப்படும்! அந்த நொடியே மெய் சிலிர்க்கும்! டேய் நீ என்னை நினைக்காட்டியும் உன்னை நான் இன்னொருத்தர் மூலமா நினைக்க வச்சேன் பார்த்தியா என்றே அதற்கு அர்த்தம்!
வெளியூர் பயணங்களில் வழி மாறிப் போகும் சில ஊர்களில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் எங்களை வரவேற்கும்! அது இந்தப் பக்கம் வந்துட்டு என்னை பார்க்காம போனா விட்டுடுவேனான்னு அவர் கேட்கிறா மாதிரியிருக்கும்! ஆஞ்சநேயரின் தற்செயல் தரிசனம் எங்களுக்கு அமைந்த பல நிகழ்வுகள் அவர் வால் போலவே நீளம்!
{இந்த 2025 புத்தாண்டு அன்றும் ஒரு நிகழ்வு! அதை வேறொரு பதிவில் எழுதுகிறேன்}
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
venkatesharumugam · 8 days ago
Text
🎵 #ருசிக்கும்_சங்கீதம் 🎵
2024 டிசம்பர் இறுதி முதல் 2025 பொங்கல் விடுமுறை முடியும் வரை திருச்சியில் பற்பல ஈவண்ட்டுகளில் இருந்தேன். என் பணி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே! வாய்ப்புள்ள இதர நேரங்களில் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம், ஏகாதிசி அரங்கன் தரிசனம், உலகின் மிகப் பெரிய சஞ்சீவ ஆஞ்சநேயர், பட்டர் ஃபிளை பார்க், திருவானைக்கோவில், மலைக்கோவில் அடிவாரம், சிங்காரத்தோப்பு உலா என்று ஒவ்வொரு நாளும் பற்பல இனிமையான அனுபவங்கள்!
கோவில் செல்லாத நாட்களில் அசைவம் சென்ற நாட்களில் சைவம் என்று எனது உணவுத் தேடலையும் தொடர்ந்தேன் திருச்சியில் பனானா லீஃப், குரு, அஜந்தா, பத்மா கஃபே, பார்த்தசாரதி, வசந்த பவன், உட்லண்ட்ஸ், சங்கர் கஃபே, ஶ்ரீமடப்பள்ளி, சரஸ்வதி கஃபே எல்லாமே ஃபேமஸ்! ஆனால் முதல் முறையாக சங்கீதாஸ் (சத்திரம் பேருந்து நிலையம் to கரூர் சாலையில்) சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது! அதுவும் நான் தேர்வு செய்யவில்லை!
முக்கொம்பு வழியாக திருச்சி நகருக்குள் நுழைந்த போது ஓட்டுநர் அண்ணன் இங்கே நிறுத்தினார் நேரம் அப்போது இரவு 9:20 இன்றைய யூடியூபர்கள் பாணியில் சொன்னால் கடையோட அட்மாஸ்பியரே அல்டிமேட்டாக இருந்தது! இதுபோன்ற பெரிய ஓட்டல்களில் இரவு 9 மணிக்கு மேல் இட்லி கிடைப்பது ஐஐடியில் இடம் கிடைப்பதற்கு இணையாகும்! அப்படியே அங்கு யாராவது இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து..
நாம் இட்லி கேட்டால் சாரி சார் அவங்களுக்கு தந்தது தான் கடைசி, இட்லி தீர்ந்திடுச்சு என்பார்கள்! நானும் போய் அமர்ந்து இட்லி 1 ப்ளேட் என்றேன் சர்வர் அங்கிருந்து மறைந்தார்! உள்ளே போயிட்டு இட்லி தீர்ந்திடுச்சுன்னு அசடு வழிய வருவார் என எதிர்பார்த்தேன், ஆனால் இட்லியின் மீது ஆவி வழிய சுடச்சுட இட்லி சூடான சாம்பார் & சட்னி வகைகளுடன் வந்தார்! இப்போது நான் அசடு வழிந்தேன்! இட்லி இலவம் பஞ்சு மென்மை! சாம்பாரைப் பார்த்ததும்..
என் தந்தையார் ஆறுமுகம் நினைவுக்கு வந்தார்! சச்சினின் ஸ்டிரைட் டிரைவ் போன்றது அப்பா வைக்கும் சாம்பார் தனித்துவமானது! அந்தத் தரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அற்புதச் சாம்பாரை ருசித்தேன். அருமையான தேங்காய் சட்னியும் அதோடு தந்த வெங்காயச் சட்னி, புதினாமல்லி சட்னிகளும் நாவில் சொர்க்கத்தை உணர வைத்தது! அடுத்த பிளேட்டும் இட்லி சொல்ல நினைத்த போது எதிரே சுவரில் இலை காளான் பிரியாணி என்னும்..
விளம்பர அறிவிப்பு என்னைக் கவர்ந்திழுத்தது! ஒரு பிரியாணி என்றேன்! இட்லிக்கு சொல்லாத சாரியை இப்போது சொன்னார் சர்வர்! அது மதிய மெனுவாம்! என்ன சொல்லலாம் என்று யோசித்த போது பிராமண சமுதாய திருமணச் சீரில் வைக்கும் பருப்புத் தேங்காய் போல கூம்பு வடிவ நெய் ரோஸ்ட் என்னைக் கடந்தது! இதை எல்லாம் 48 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்தவன் தான் இருப்பினும் தங்க நிறமும் காபிப் பொடி நிறமும் உள்ள..
நெய்ரோஸ்ட் ஒரு புலி போன்றது! ஆம் புலியைக் காட்டில் காண்பது அரிது! அதுபோலத் தான் இந்த இரண்டு நிறமும் இணைந்த நெய் ரோஸ்ட்டைக் காண்பதும்! தோசை மாஸ்டருக்கு செக் வைக்க முடிவு செய்து ஒரு நெய் ரோஸ்ட் ஆனா முறுகல் இல்லாமல் என்றேன்! நமது ஓட்டுநர் அண்ணன் இட்லிக்கு பிறகு புர��ட்டா சொல்லியிருந்தார் ரோஸ்ட் வர தாமதிக்க அவருக்கு வந்த புரோட்டாவில் ஒன்றை கர்ணன் போல எனக்களித்தார்!
ஆஹா! ஒரு சைவக் கடையில் இப்படி ஒரு புரோட்டா சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று! புரோட்டாவும் சரி அதற்கு தந்த 2 வகை குருமாக்களும் சரி அப்படி ஒரு பெஸ்ட் காம்போ! எனது நெய் ரோஸ்ட் வந்தது! நான் வைத்த செக்கில் தப்பி எனக்கு செக் வைத்திருந்தார் மாஸ்டர்! ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பதமான தோசை கிடைக்காது! ஏன்னா தோசைக் கல்லின் சூடு அப்படி! முறுகல் மிக மிக எளிது ஆனால் பதமான தோசை தான் கடினம்!
பதமான தோசைக்கு இதமான இட்லி மிளகாய் பொடி, சட்னி, சாம்பாருடன் அதகளம் தான்! முழு தோசையும் சாப்பிட ஆசைதான் ஆனால் எனக்கு புரோட்டா தானம் செய்த ஓட்டுநர் அண்ணனின் முகம் நினைவுக்குவர என் ரோஸ்ட்டில் பாதியை அவருக்குத் தந்து “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எனும் நம் முன்னோரது வாக்கை மெய்யாக்கினேன்! மறுநாள் முதல் காலை, மதியம், இரவு 3 வேளையும் அங்கே தான்! பொங்கல், பூரி மசாலா..
இலை புரோட்டா, இலை பிரியாணி அனைத்தும் அருமை! மதியம் மீல்ஸ் ஆஹா லெவல்! ஒரு நாள் தாமதமாகி காலை உணவை மிஸ் செய்து 11 மணிக்கு சாப்பிடப் போனேன். இந்த நேரம் காலை டிபனுக்கும் மதிய மீல்சுக்கும் இடைப்பட்ட ரெண்டுங்கெட்டான் நேரம்! டிபன் வகைகள் முடிந்து மீல்ஸ் தயாராகவில்லை என்றனர்! சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்றதும் சாம்பார் சாதம் சொன்னேன்! கேரளப் படகின் வடிவில்..
ஒரு நீளக் கிண்ணத்தில் சாம்பார் சாதம் வந்தது! கூடவே சிறிய கிண்ணத்தில் பொரியல், அப்பளம். சாம்பார் சாதம் அபார சூடாக பிஸிபேளாபாத் போல இருந்தது! பிளிபேளாபாத் என்னும் கன்னடச் சோறு மெல்லிய தித்திப்பில் இருக்கும் கரம் மசாலாவின் காரம் கன்னக் கதுப்புகளில் பரவும்! அந்த ருசியை மனதில் நினைத்து ஸ்பூனில் அள்ளி ஊதி ஊதி சாப்பிட்டால்.. வாவ்! நான் ருசியில் தமிழ்நாட்டுக்காரன் என்றது சாம்பார்!
திருச்சி, தஞ்சை & டெல்டா மாவட்டங்களில் கல்யாணச் சாம்பார் என்று மிகப் பிரசித்தம்! கல்யாண விருந்தில் முழு சாப்பாட்டையும் சாம்பார் வாங்கியே ரசித்து சாப்பிடுவார்கள்! அந்த ருசியில் இருந்தது! முருங்கை, பீன்ஸ், வெங்காயம், கிழங்கு, அவரை எல்லாம் பதமாக வெந்து சாதத்தில் குகனோடு ஐவராகி இருந்தது! டிபிகல் தமிழ்நாட்டு சுவையில் ஒரு சாம்பார் சாதம்! எதிலும் குறை காண முடியவில்லை அப்படி ஒரு உயர்ந்த தரம்!
முக்கியமாக அங்கிருக்கும் பணியாளர்களின் கவனிப்பும் அன்பான சேவையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது! இன்முகத்துடன் எல்லா பணியாளர்களும் உபசரித்தனர்! விக்ரமன் பட கேரக்டர்கள் போல அவ்வளவு நல்லவர்களாக இருந்தனர்! அடை, ஆப்பம், பணியாரம், ஃப்ரைடு ரைஸ் வகைகளை ருசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! ஆனால் என்னுடன் வந்திருந்த நண்பர்கள் அதை எல்லாம் ருசித்து மகிழ்ந்து பாராட்டினர்! திருச்சியின் சைவ ஓட்டல்களுக்கு..
சங்கீதா ஒரு அடையாளமாக இருப்பது, இதுபோன்ற ஓட்டல்கள் அமையாத ஊர்க்காரர்களுக்கு பொறாமையை வரவழைக்கும்! எனக்கும் வந்தது! இங்கு விலை அதிகம் என்பார்கள்! ஏனெனில் அங்கு தரமும் சுவையும் அப்படி! இதே தரமும், ருசியும், உபசரிப்பும் கொஞ்சமும் குறையாத வரை இவர்களுக்குத் தோல்வியே இல்லை! நாம் சங்கூதற வயசு வரை இனி சங்கீதானு நம்பி சாப்பிடலாம் 💖
டிஸ்கி : இது சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கரூர் போகும் சாலையிலுள்ள கடையில் நான் சாப்பிட்ட அனுபவம். வேறு கிளைகளில் அல்லது வேறு ஊர் சங்கீதாவில் உங்களுக்கு சங்கு சத்தம் கேட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! தொடர்ந்து 4 நாட்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 2 வேளை இங்கு சாப்பிட்ட பின்பே இதை..
என் மனசாட்சியோடு எழுதியுள்ளேன். இதற்காக நான் எவரிடமும் எந்த விதத்திலும் சலுகையோ, தொகையோ பெறவில்லை! மாறாக அங்கு எங்களுக்கு சேவை செய்த அனைத்து பணியாளர்களுக்கும் 4 நாட்களின் 10 வேளைகளிலும் என்னால் இயன்ற ஒரு நல்ல தொகையை நன்றி சொல்லி ஊக்கப்படுத்தி தந்திருக்கிறேன்! 🥰🥰💖
(இதைத் தந்ததை என் பெருமைக்காக சொல்லவில்லை, இந்த அருமை தெரியாத சில.. மகிஷாசுரர்கள் நீ பணம் வாங்கிட்டு எழுதினே என்பார்கள் அதற்கு தான்)
கொசுறு டிஸ்கி : இது என் தாய் மீது சத்தியம்!
{இந்த ஃபேஸ்புக்கில் ஒரு ரிவ்யூ எழுதறது எம்புட்டு கஷ்டம்.. அவ்வ்வ்வ்🤪}
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 8 days ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🟢 மதுரை உருளைக்கிழங்கு மசாலா 🟢
🥔 கிழங்கு பொட்டலம் 🥔
{4 -5 நபர்களுக்கு}
தேவையானவை: மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, வேகவைத்து, தோலுரித்து, துண்டாக்கியது - 8, கடலை எண்ணெய் - 100 மிலி, 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 4 தேக்கரண்டி கடலை மாவு, நறுக்கிய 8 பல் பூண்டு, நறுக்கிய 4 பச்சை மிளகாய், நறுக்கிய 4 பெ. வெங்காயம், சிறிது கறிவேப்பிலை நறுக்கியது, சிறிது புதினா இலைகள் நறுக்கியது, சிறிது கொத்தமல்லி இலைகள் நறுக்கியது, 1/2 தேக்கரண்டி பெருங்காயம், 1 -1/2 தேக்கரண்டி உப்பு.
செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும் அதில் கடுகு, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து பொரிய தாளித்து பின்பு நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, புதினா/ கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகாய் தூள் சேர்க்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் கடலைமாவு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். இந்தக் கலவையில் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது அவித்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, கரண்டியின் பின்புறத்தில் சிறிது ம���ித்து கடாயில் ஐந்து நிமிடங்கள் பிரட்டி வதக்கி இறக்கி சூடாகப் பரிமாறவும்! பாரம்பரிய மதுரை பொட்டலம் உருளைக்கிழங்கு இது!
பிற ஆயில்களும் பயன்படுத்தலாம் கடலை எண்ணெய் தான் பெஸ்ட்! கடுகோடு உளுந்து சேர்த்து தாளிப்பது உங்கள் விருப்பம்!
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 11 days ago
Text
#வெற்றித்_திலகம்
சேப்பாக்கத்தில் நடக்கும் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளிலும் மறக்க இயலாத ஏதாவது ஒரு வரலாற்றுச் சிறப்பு அமைந்துவிடும். டெஸ்ட், ஒரு நாள் , T20 ஒவ்வொன்றிலும் ஒரு சாதனையை சத்தமின்றி தன் வசம் வைத்திருக்கும் சென்னை சேப்பாக்கின் ‘சிதம்பர’ ரகசியம் இந்த உலகமே அறிந்ததுதான்!
2023 T20 உலகக் கோப்பையுடன் ரோகித், கோஹ்லி அறிவித்த ஓய்வுக்குப் பின் அடுத்த கட்ட வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி துவங்கியது. சூர்யகுமார் தலைமையில் கடந்த ஓராண்டாக இந்தியா T20 ஃபார்மெட் கிரிக்கெட்டிற்கு கட்டமைத்து வரும் அணித் தேர்வு மிகச் சிறப்பானது! அது 95% வெற்றி தந்துள்ளது!
இது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல! இந்திய T20 அணிக்கு கிரவுண்டில் பாப்கார்ன் விற்பவரை கேப்டானக போட்டால் கூட இந்தியா வெல்லும் என்னும் அளவுக்கு உலக அளவில் T20யில் நாம் வலுவானவர்கள்! அதிரடிக்கு பெயர் பெற்ற SKY கேப்டன் ஆனபின்பு சிறப்பான அவரது பாணி ஆட்டம் ஏதும் ஆடவில்லை!
ஆனால் தலைமைப் பண்பில் அபாரமாக மிளிர்ந்தார்! வீரர்களுக்கு இடையே இறுக்கத்தைக் களைந்தார். அணியின் வெற்றிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்பதை உணர வைத்தார் இளைய வீரர்கள் தயக்கமின்றி மூத்த வீரர்களை அணுகும் சூழலை ஏற்படுத்தினார், முக்கியமாக திறமைக்கு முக்கியத்துவமளித்தார்!
தனிமனிதனின் சாதனையை விட ஒரு அணியாக வெல்வதே முக்கியம் என்பதை ஒவ்வொரு வீரருக்குள்ளும் விதைத்தார். அணியின் வெற்றிக்கு யார் வேண்டுமானாலும் தம் கருத்துகளை என்னிடம் கூறலாம் என்னும் சுதந்திரம் அளித்தார். வீரர்கள் ஆடும் ஆட்ட முறைகளில் மாற்றம் பற்றியும் அவர்கள் இறங்கும் டவுனில்..
ஏதும் பிரச்சனை இருந்தால் அதில் செய்யும் மாற்றங்கள் பற்றியும் என்னிடம் யார் வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம் என்றார்! அவர் சொன்ன வார்த்தையை நம்பி 4 வது 5வது டவுனில் ஆடிக் கொண்டிருந்த திலக் துணிச்சலாக சென்று ஒன் டவுனில் என்னால் மிகச் சிறப்பாக ஆடமுடியும் அதை எனக்கு தரமுடியுமா என்றார்!
திலக் கேட்ட ஒன் டவுன் சூர்யாவின் டவுனாகும்! கேட்டது எப்படி இருந்தது தெரியுமா? கடையில் எந்தப் பொருள் எடுத்தாலும் 10 ரூபாய்னு சொன்னதும் அப்போ அந்த கல்லா பெட்டியை கொடுங்கன்னு கேட்டது போல! சூர்யாவிற்கு ஈகோவோ தன் இடத்தை விட்டுத் தரமுடியாத பிடிவாதமோ கொஞ்சமும் இல்லை!
அணியின் வெற்றியே முக்கியம் என்பதை நிரூபிக்க அந்த இடத்தை உடனே விட்டுக் கொடுத்தார்! அவர் அணியின் வெற்றிப் பாதையை கட்டமைத்ததிற்கு இது ஒரு சோறு பதம்! இதைத்தான் அவரது சிறந்த தலைமைப் பண்பு என்கிறார்கள் உலகளாவிய கிரிக்கெட் வல்லுநர்கள்! ஒன் டவுனில் திலக் ஆடத் துவங்கினார்..
அதன் பின்பு இப்போது வரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வீழ்த்த முடியாத வீரராக ஆடி வருகிறார் திலக் வர்மா! இந்த 4 ஆட்டங்களில் 2 சதங்கள், ஒரு 50+ ரன்கள் அடங்கும்! T20 ஆட்டங்களில் அதிரடி தான் அடி நாதமே என்றாலும் நேற்றைய திலக்கின் ஆட்டம் அடக்கி வாசித்த அதிரடி என்று சொல்லலாம்!
வெற்றிக்கு அருகில் இருந்த போது சுழலுக்கு சாதகமான பிட்சில் அடில் ரஷீத்தின் 4 டாட் பால்களை அவர் ஆடிய போது இன்றைய T20 ரசிகர்களின் பார்வையில் 4 பந்துகளை வீணடித்துவிட்டான் என்றே எரிச்சல் வந்திருக்கும்! ஆனால் பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்கி பாய வேண்டிய நேரத்தில் பாய்வதே சிறந்தது!
அவர்கள் தான் சிறந்த கேம் ஃபினிஷர்களாக உருவாகி வருவார்கள் அப்படி ஒரு கேம்ஃபினிஷர் தான் இன்று இந்திய அணிக்கு தேவை! அதை கடந்த ஓராண்டுக்குப் பின் கண்டடைந்துள்ளோம்! இனி திலக் மீதான கேப்டனின் நம்பிக்கை விரிவடையும்! பல்வாள் தேவனுக்கு அமைந்த பாகுபலி போல ஒரு வீரர் தான் திலக்வர்மா!
ஆக்ரோஷமாக மோதிக் கொண்டுள்ள களத்தில் எதிரி பொது மக்களை பிணையாக கொண்டு வந்து நிறுத்தும் போது தன் நாட்டு மக்கள�� தாக்கப்படக் கூடாது என அதிரடியை நிறுத்திய அக்கறை, துல்லிய திட்டமிடல், சிறந்த தந்திரங்கள், வாய்பேசாது களத்தில் பதிலடி! இது பாகுபலிக்கு மட்டுமல்ல திலக்கிற்கும் பொருந்தும்!
நேற்றைய ஆட்டத்தில் ஆர்ச்சரின் பவுன்சரில் எட்ஜாகி ஆர்ச் போல பின்னோக்கி போனது ஒரு சிக்ஸர்! நல்லா காட்டு சுத்து சுத்து என்பது போல ஆர்ச்சர் கேலியான முகபாவனை காட்ட அதை பார்த்து அடுத்த பந்தை ஸ்டெம்பை விட்டு விலகி ஆஃப் சைடில் ஒரு சிக்ஸர் அடிப்பார்! பதிலடிக்கு அது ஒன்றே உதாரணம்!
22 வயதில் இப்படிப்பட்ட நிதானமான அதே நேரத்தில்,வெற்றி வேட்கையுடன் விக்கெட்டை இழக்காமல் ஆடும் வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார்! இந்த ஒரு மேட்ச் வைத்து பில்டப் பண்ணாதிங்க என்கிறீர்களா? இல்லை! இது இவருக்கு இந்திய மண்ணில் முதல் 50+ இவர் மீது எதிர்பார்ப்பு எகிறி இருக்கும்!
இந்தத் தருணங்கள் அவர் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும்! அதை அவர் மனதில் கொண்டு தொடர்ந்து நிலையாக ஆடும் உத்வேகமளிக்கும்! இந்தியாவிற்கு ஒரு சிறந்த கேம் ஃபினிஷர் நேற்று அடையாளம் காணப்பட்டார் என்று கூட சொல்லலாம். இவர் மீதே சுமையை திணிக்காமல் மற்ற வீரர்கள்..
தங்கள் ஆட்டத் திறனை வளர்த்துக் கொள்வது, இவருக்கு பக்க பலமாக நிற்பது போன்றவற்றை உடனிருந்து செய்தாலே போதும் இந்திய அணி இன்னும் பல வெற்றிகளைப் பெறும்! T20யில் இந்திய அணியின் வெற்றித் திருமுகத்தின் நெற்றியிலிட்ட திலகம் தான் திலக்! இந்தத் திலகம் இந்தியாவின் வெற்றித் திலகமே!
Tumblr media Tumblr media
1 note · View note
venkatesharumugam · 12 days ago
Text
#டிஜிட்டல்_பொங்கல்
அபார்ட்மெண்ட்டின் 167வது மாடியில் இருந்தது அவன் வீடு! ஜனவரி குளிர் ஜன்னல் கதவில் படிந்திருக்க உள்ளே மிதமான உறுத்தாத குளிர் ஏசியாக வீசிக் கொண்டிருந்தது. ‘தைப்பொங்கலும் வந்தது’ பாடலின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ் ரிங் டோனில் அலாரம் ஒலித்தது!
குவிந்து கிடந்த போர்வைக்குள்ளிருந்து குழந்தை பாகுபலியை ஏந்திய ராஜ மாதா போல ஒரு கை வெளிப்பட்டு அலாரம் ஒலித்த ஆப்பிள் ஐ போன் 76 Pro max ஐ எடுத்தது, நேரம் அதிகாலை 5:30!ஏங்க எழுந்துட்டிங்களா இன்னிக்கு பொங்கல் என்ற அவன்..
மனைவியின் அசரீரீ லேட்டஸ்ட் மாடுலர் கிச்சனில் இருந்து ஒலித்தது போர்வையை விலக்கி உதறி சோம்பல் முறித்தான், மீண்டும் தூங்க வந்த ஆசையை அடக்கிக் கொண்டான். எழுந்து பாத்ரூமிற்கு சென்று 15 நிமிடங்களுக்குப் பின் புதிய மலர் போல வெளியே வந்தான்.
ஷேவ் செய்த கன்னங்களில் ஓடிகலோன் மஸ்க் மணக்க, ப்ரஷ் செய்த பின் கொப்பளித்த ஸ்டிராபெர்ரி மவுத் வாஷில் வாய் மணக்க கிச்சனில் நுழைந்தான். அடர் பர்ப்பிள் மினி ஷார்ட்சும் வயலட் ஸ்லீவ்லெசும் அணிந்து குளித்து முடித்த அடையாளமாக தலையில் முடிச்சாக டவல்
கிச்சன் வேலைகளில் மும்முரமாக இருந்தாள் அவன் மனைவி அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள் போல! அவளைச் சுற்றி ஒரு வாசனை மாநாடே கூடியிருந்தது! பின்புறமாக சென்று அவளைக் கட்டியணைத்து கழுத்தோரத்தில் மென்மையாக முத்தமிட்டான்.
தடுப்பதா விடுப்பதா என ஒரு கணம் தயங்கியவள் அய்யே போதுமே ரொமான்ஸ்! சார் இன்று பொங்கல்! இன்னிக்கு உருப்படியா என்ன பண்ணியிருக்கிங்க? என்றாள் அவனை விடுவித்துக் கொள்ளாமல் ஒரு கப்பில் க்ரீன் டீ ஊற்றி���படி! அவன் இரு கையில் ஒரு கையை..
அவள் தோள்களில் வைத்து மறு கையால் க்ரீன் டீ கப்பை ஏந்திக் கொண்டான். டியர்! இன்னிக்கு பொங்கல் பண்டிகை இல்லியா! இதை செலிபரேட் பண்ண Tamil fest டாட் காமில் நாம பாரம்பரிய பொங்கல் வைக்கணுமுன்னு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கேன்.
அவங்க நமக்காக பொங்கல் வச்ச வீடியோவை ஃபேஸ்புக் லைவில் அனுப்பிவிடுவாங்க! பொங்கலை பேக் பண்ணி டோர் டெலிவரி தந்துடுவாங்க கரும்பு ஜூஸ் கூட மிண்ட் ஜிஞ்சர் போட்டு டெட்ராய்ட் பேகில் வந்திடும்! மஞ்ச கிழங்கை பைபர்ல பண்ணி அனுப்புவாங்க.
அதை நம்ம டிஜிட்டல் சுவாமி ரூமில் வச்ச ஆட்டோமேடிக்கா அதுவே லைட் மாதிரி யெல்லோ கலரில் எரியுமாம்! நாம பிளாட்டினம் பொங்கல் கேட்டகிரில புக் பண்ணியிருக்கோம் சோ எவ்ரி திங்க் ரெடி! இதுக்கு நமக்கு நாலு சினிமா டிக்கெட் கூட ஃப்ரீ.!
8 ஓ கிளாக் நமக்கு பொங்கல் டெலிவரின்னு வாட்ஸ் அப் வந்திருக்கு லெட்ஸ் ஸ்டார்ட் அவர் பொங்கல் செலிபிரேஷன் ஓகே என்றான். அட போங்க என சலித்துக் கொண்டாள் மனைவி, என்ன டியர் ஏன் சலிச்சுக்கிற? இல்லிங்க இதெல்லாம் நாம வீட்டில் செய்ய முடியாதா?
ஒரு பழைய டாகுமெண்டிரி மூவியில் நேத்து பார்த்தேன், எவ்வளவு சூப்பரா இருந்தது தெரியுமா வயல்வெளி கிராமம், மாடு, அடுப்பு, பானை, கரும்பு வாவ் லவ்லி அட்மாஸ்பியர் அதெல்லாம் நான் அனுபவிக்க மனசு தவிக்குதுங்க என்றாள் கண்ணில் ஏக்கம் தெறிக்க!
ஆர் யூ க்ரேஸி! அதெல்லாம் 50 வருஷத்துக்கு முன்னாடி, இப்ப எல்லாம் அரசு மியூசியத்துல தான் அதை பார்க்கணும்! நம்ம நாட்டில் இப்போ ஏது கிராமம்!!! ஏன் இந்த ப்ளாட்டுல நம்ம சொந்த வீட்டுல பொங்கல் வைக்கவே அனுமதி இல்ல இதுல எங்க கொண்டாட?
இங்க பாரு இந்த பொங்கல் வாங்கினதுக்கு ஆஃபரா ஒரு ஜம்போ சிக்கன் பீட்ஸாவும் 2 லிட்டர் கோக்கும் ஃப்ரீயாம் அதை நெனைச்சு சந்தோஷப்படுவியா கிராமம், பொங்கல்னு.. “ஏங்க அப்போ நம்ம மக்கள் பாரம்பரியமான பொங்கலை மறந்துடுவாங்களா என்றாள்.
மெல்ல அவள் தலையைக் கோதிவிட்டு சொன்னான் இந்தளவுக்காவது இன்னும் பொங்கல் பண்டிகை நம்ம ஜெனரேஷனில் இருக்கேன்னு சந்தோஷப்படு டியர்” என்ற போது அவனது மொபைலில் இன்றைய அரிசி விலை கிலோ ₹2300 என திரையில் ஒளிர்ந்தது.
#கிபி2075இல்_பொங்கல்
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 13 days ago
Text
#காஷ்மீர்_பயண_அனுபவங்கள்
நான் 2013 ஆம் ஆண்டில் ஜம்முவில் இருந்து ஶ்ரீநகருக்கு மலைச் சாலையில் காரில் பயணம் செய்த அனுபவம் மிகவும் திரில்லிங் நிறைந்தது. கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பய���ிக்க வேண்டும். 54 கிமீ தூரமுள்ள கொடைக்கானலே 3 மணிநேரப் பயணம் எனும் போது 300 கி,மீ மலைப்பயணம் எவ்வளவு நேரம் என்பதை ஊகிக்கவும்! முதலில் கொடைக்கானல் போலத்தான் அந்தப் பயணம் இருந்தது!
மலையேற ஏறத்தான் இமயத்தின் பிரமாண்டம் தெரிந்தது! சாலை விளிம்புப் பள்ளங்கள் 2000 அடி 5000 அடி என சரேல் சரேல் என செங்குத்தாக இறங்கி வைகுந்தத்தில் முடிந்தன! தூரத்து மலை மீது வைஷ்ணவி கோவில் தெரிந்தது! அந்த மலையை ஒருவித பயத்துடன் டூவீலரில் கோவிலை கடக்கும் போது சாமி கும்பிடும் ஸ்டைலில் விரல்களால் தாடையில் டைப்பிட்டு வேண்டிக் கொண்டோம்
வடக்கத்திய டிரைவர்கள் மிக மிக அவசரமானவர்கள் போலும், இந்த அபாயகரமான சாலையில் 100 கி.மீ வேகத்திற்கு குறையாது மலை ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர். மலைப்பாதையில் கடை பிடிக்கும் எந்த ஒரு விதிமுறையும் அங்கு இல்லை ஒரு வேளை அந்த அதல பாதாளத்தில் அதை தள்ளிவிட்டு விட்டார்கள் போல, எங்கள் பயணம் முழுவதும் நாம் திரும்பிய இடமெல்லாம் ராணுவம்!
ராணுவத்தில் இத்தனை சீருடையா என்று வியக்கலாம்! ஏராளமான செக்போஸ்ட்டுகள், டீக்கடையில் நின்று டீ சாப்பிடும் போது அலட்சியமாக AK 47, AK56, லாஞ்சர், எல்லாம் சுவற்றில் சாய்த்து வைத்து எங்களோடு டீ சாப்பிட்டு கொண்டு இருந்தனர் ராணுவர்கள்! பக்கத்து கிராமத்தில் ��ேத்து துப்பாக்கி சண்டை நடந்தது என்ற போது மிச்ச டீயை கீழே ஊற்றிவிட்டு அவசரமாக கிளம்பினோம்.
அதிலும் நீங்கள் எதாவது ஒரு இடத்தில் இறங்கி புகைப்படம் எடுத்தாலோ 5 நிமிடத்திற்கு மேல் நின்றாலோ மலைகளில் இருந்து ராணுவத் தலைகள் முளைக்கும்! ஆனால் அவ்வளவு சினேகமாக பழகுகிறார்கள்! என்னை ஒரு ராணுவர் நீங்கள் எந்த ஊர் என்ற போது மதராஸ் என்றேன் “ஓ சென்னை சூப்பர் கிங்ஸ் என்றார்! இதுவரை நம்மை மதராஸி என்று அழைத்தவர்கள் ஐபிஎல் மூலம் திருந்தி..
சென்னை என்று ஒப்புக்கொண்டது மகிழ்வாக இருந்தது. மலைப் பயணம் அருமையாக இருந்தது ஒரு 100 கி.மீ மலை ஏறியதும் எல்லாம் விமான காட்சி தான் அதிலும் கரை புரண்டு ஓடும் நதி ஒன்று 1500 அடி பள்ளத்தில் நம்மோடு பயணித்து வரும் காட்சி.. அடடா! திடீர் வளைவுகள், பாறைகள் உருண்டு வரும் பகுதி, அபாயகரமான பள்ளம் என்ற அறிவிப்புகள் வயிற்றைக் கரைத்து கொண்டிருந்தது.
150 கி.மீ தாண்டியதும் காஷ்மீரிகளின் மலை கிராம வாழ்க்கை தெரிய ஆரம்பித்தது! அங்கு ஆடு வளர்ப்பது மிக முக்கியத் தொழில்! நம்ம ஊர் ஆடுகள் போல அல்ல அத்தனையும் கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் குறிப்பிட்ட காலத்தில் அவற்றை கீழிருந்து மேலே குளிருக்கு அழைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அந்த உரோமம் வளருமாம்! நீங்கள் கூட்டமாக எவ்வளவு ஆடுகள் பார்த்திருப்பீர்கள்?
100, 200,500, 1000,2000? கிட்டத்தட்ட அந்தப் பயணத்தில் 2 லட்சம் ஆடுகள் நான் பார்த்து இருப்பேன்! ஒவ்வொரு ஆட்டு மந்தையிலும் குறைந்தது 2000 ஆடுகள் இருக்கும்! அதற்கு நம்ம ஊரு கீதாரி போல ஒருவர், அவரது உதவியாளர் இருவர் இவர்களுக்கு சமைக்க 3 பேர் மொத்தம் 6 பேர் குழு! கட்சி மாறக்கூடிய எம்.எல். ஏக்களை அழைத்து செல்வது போல் அத்தனைப் பாதுகாப்பாக..
அவற்றை அழைத்துச் செல்கின்றனர், அப்படியும் சில ஆடுகள் பள்ளத்தில் தாவி ஓடிவிடுமாம்! வெறும் விசில் சப்தத்திலேயே அத்தனை ஆடுகளையும் வழி நடத்தி செல்கிறார்கள்! 2000 ஆடுகள் சாலை நடுவே சென்று கொண்டு இருக்க எங்கள் வண்டி வழி கேட்டு ஹாரன் அடிக்க அந்த கீதாரி ஒரு விசில் கிக்கிக்கிக்கிக்கி என்று அடித்த 5 வினாடிகளில் அத்தனை ஆடுகளும் வண்டிக்கு வழி விட்டு..
வசுதேவருக்கு பிளந்த யமுனை போல ஒதுங்கியது ஆச்சர்யம்! அந்தக் கீதாரிகள் குரலுக்கு அவ்வளவு பணிவு, பயம்! அடுத்து மலைக்குகை பயணங்கள்! நீளமான இருள் குகைக்குள் பயணம் சிலிர்ப்பூட்டும் பயணங்கள்! இந்த குகை வாசலில் ராணுவத்தினரின் செக்போஸ்ட் உள்ளது, இங்குதான் அந்த ஆட்டு மந்தைகள் காத்திருப்பில் வைக்கப்படுகிறது! கூட்டணிக்கு காத்திருக்கும் கட்ச���கள் போல.
ஆனால் ரொம்ப காக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்த மந்தைகளை அந்த கணவாயுள் அனுமதிக்கிறார்கள்! திடீரென்று சூழும் இருள் பிறகு வெளிச்சம் என அற்புதமான பயணம் அது! கார்கில், லே, லடாக், போன்ற ஊர்களின் தூரத்தை குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளை பார்க்கும் போது நாம் தேசத்து எல்லையில் இருக்கிறோம் என்பது பெருமிதமாக இருந்தது.
சாலையோரம் எல்லா கடைகளிலும் கிரிக்கெட் பேட்டுகள் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்! காஷ்மீர் வில்லோ என்ற மரத்தில் செய்யப்படுபவை கிரிக்கெட் பேட்டுகள் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்! காஷ்மீரை நெருங்க நெருங்க நம்ம சென்னை ரோடுகளில் உள்ள கும்பகோணம் காபி கடை போல குங்குமப்பூ கடைகள் தென்படுகின்றன இடையிடையே சாப்பிட நிறுத்திய..
ஓட்டல் கடைகளில் தந்தூரி ரொட்டிகளும் தட்டைப்பயிர் க்ரேவியும் அற்புதம்! எல்லா கடைகளிலும் ப்ரெட் ஆம்லெட் கிடைப்பது ஆறுதல்! இத்தனை தூரத்திலும் தொடர்ந்து கூட வரும் நெட் வொர்க் BSNL மட்டுமே! ஹட்ச் நாய் விளம்பரம் BSNL க்கு தான் பொருந்தும்..! காஷ்மீர் செல்பவர்களுக்கு BSNL நெட்வொர்க் தான் சிறந்தது! காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு ஶ்ரீநகரை அடைந்தோம்!
ஶ்ரீநகர் அனுபவங்கள் இன்னொரு தனிப்பதிவாக..
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
venkatesharumugam · 14 days ago
Text
🏏 வருண்ஜாலம் 🏏
நேற்றைய இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடத்த டி20 ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தியின் மாயச் சுழல் பந்துகள் ஸ்டெம்புகளை குறி வைத்து வீழ்த்தின! ஒரு வேகப்பந்து வீச்சில் தெறிப்பது போல ஸ்டம்புகள் தெறித்து பறந்தன! வருண் பந்து வீசும் போது பந்தை சைடாக பிடித்து விரல்களால் சுழற்றுவார்!
அவரது விரல் பந்தை சுழற்றுவதை பேட்ஸ்மேன் பார்க்க முடியாது! கிட்டத்தட்ட லெக் ஸ்பின் வீசுவது போன்ற ஆக்‌ஷனில் ஆஃப் ஸ்பின் வீசுவார். அதனை பாரம்பரிய தூஸ்ரா வகை என்று சொல்ல முடியாது! தூஸ்ரா அப்பட்டமான ஆஃப் ஸ்பின் ஆக்‌ஷனில் வீசப்படும் பந்து! வருண் வீசும் முறை இதிலிருந்து மாறுபட்டது!
வேண்டுமென்றே முதலிரண்டு பந்துகளை இதே ஆக்‌ஷனில் லெக் ஸ்பின்னாக வீசிவிட்டு மூன்றாவது பந்��ை வெடுக்கென ஆஃப் ஸ்பின்னாக வீசி பேட்ஸ்மேனை வீழ்த்துவதே வருணின் ஸ்டைல்! நேற்று வருண் வீசிய முதல் ஓவரில் ஹாரி ப்ரூக்கின் பின் கால்கள் வழியே விக்கெட் கீப்பர் திசையில் ஒரு பவுண்டரி போகும்!
அந்தப் பந்தே அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டிய பந்து! அவர் நகர்ந்து ஆடியதால் அப்போது பிழைத்தார். அடுத்த ஓவரில் நான் இங்கே சொன்னதைப் போல ஒரு லெக் ஸ்பின் வீச அதை ப்ரூக் அசால்டாக பவுண்டரி அடிக்க அடுத்தப் பந்தை வருண் ஸ்டைலில் வீச பந்து கால் பேடில் பட்டும் மிடில் &லெக் ஸ்டம்புகளை தாக்கும்!
பந்து அத்தனை வேகமாக திரும்புவதும் ஒரு அழகு! ப்ரூக் பரவாயில்லை அடுத்துவந்த லிவிங்ஸ்டோன்2 வது பந்திலேயே ஷோயப் அக்தர் பந்தில் போல்டானது போல லெக் ஸ்டம்பு உருண்டு விழும் அளவு போல்டாகி இருப்பார்! மேட்சின் ஹைலைட்ஸ் பார்த்தால் லிவிங்ஸ்டோனின் வியப்பு தெரியும்!
என்ன நடந்தது, எப்படி நடந்தது பந்து எப்போ இங்க பிட்ச் ஆச்சு எப்போ வெளியே திரும்பாம உட்புறம் திரும்பியது என்கிற குழப்பம் அவரது முகத்தில் பளிச்சென தெரியும்! இதைத் தான் நான் வருண் ஜாலம் என்று குறிப்பிடுகிறேன்! நேற்றைய ஆட்டத்தின் திருப்பு முனை இவர் ஒரே ஓவரில் எடுத்த அந்த 2 விக்கெட்டுகள் தான்!
பட்லர் ஒருவர் மட்டும் 68 ரன்கள் எடுத்து இருந்தார் ப்ரூக் எடுத்த 17 ரன்கள் தான் இரண்டாவது அதிக ஸ்கோர் 64/3 என்றிருந்த ஸ்கோர் 132க்கு ஆல் அவுட் என்னும் நிலைக்கு மாறியது! கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து வருணின் பவுலிங் நிறைய மெருகேறியுள்ளது! இந்த வருண்ஜாலம் என்றும் தொடர வேண்டும்!
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 16 days ago
Text
#நல்லியெலும்பு_மசாலா
இனிமேல் நமக்கு தீவிர சைவ உணவுகள் தான் என்று முடிவெடுக்கும் போதெல்லாம் விஸ்வாமித்திரர் முன் வந்து ஆடும் மேனகை போல் மே.. மேன்னு கத்திகிட்டு இந்த அண்ணா.. அடச்சே ஆடு வந்துடுது! கொரோனா லாக்டவுனிலேயே வாரா வாரம் ஆரவாரம் போல அசைவ உணவுகளை ருசித்த நமக்கு சைவ உணவுகள் செட்டாகுமா?
இந்த சுயபரிசோதனையை என்றாவது எடுத்து இருக்கிறோமா என சேலம் சாரதா காலேஜ் ரோட்டின் அருகேயுள்ள பிருந்தாவன் தெருவில் நின்று யோசிக்கும் போதே காற்றில் மிதந்து வந்த மட்டன் எலும்பு மசாலாவின் நறுமணம் மனதை மயக்கியது மட்டுமின்றி என் கால்களை மணம் வந்த திசை நோக்கி இழுத்துச் சென்றது!
மெல்லத் திறந்தது கதவு படத்தில் மோகன் அமலாவை தேடிச் சென்றது போல நானும் தேடி ஓடினேன். அங்கு நல்லா திறந்த கதவுகளோடு ஜுனியர் குப்பண்ணா மெஸ் தென்பட்டது! நான் சிறிது ஜெர்க் ஆனேன்! ஏனெனில் ஜுனியர் குப்பண்ணா கடைகளின் பல ஊர்க் கிளைகளில் நான் சாப்பிட்டுப் பெற்ற அனுபவங்கள் அப்படி!
ஜுனியர் குப்பண்ணா எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கும் என்று அஞ்சுவது போன்ற ஒரு கடை! நம்பிப் போனால் நட்டாற்றில் விடும் நம்பாமல் போனால் நல்லி மசாலா தந்து அச��்தும்! ஜுனியர் குப்பண்ணாவில் நான் ரசித்த & வெறுத்த கிளைகளில் எல்லாம் நல்லி எலும்பு மசாலா மட்டும் குறை வைத்ததில்லை என்பேன்!
இந்த டேட்டாவை என் முளை எனக்கு சான்றளிக்க.. சரி வருவது வரட்டும் என டேபிளில் அமர்ந்து ஒரு சாப்பாடு ஒரு நல்லியெலும்பு மசாலா என்று ஆர்டரினேன்! 2 நல்லி எலும்புகளை ஏவுகணைகள் போல தட்டில் ஆவி பறக்க கொண்டு வந்து வைத்தனர்! இரட்டைக் கிளவிகள் போல தட்டில் அவை அடுத்தடுத்து வீற்றிருந்தன!
பொல பொலவென வெந்த வெள்ளை சோற்றோடு கரகரவென அரைத்த மசாலாவில் விறுவிறுவென்ற செல்லக் காரத்துடன் தட்டில் கிடந்த நல்லி மசாலாவை சோற்றில் எடுத்துப் போட்டு மேலாக பிரட்டுவது போல கலந்’தேன்’. நிச்சயம் அது தேன் தான்! அற்புதமான மசாலா கலவையில் கறியை பக்குவமாக சமைத்திருந்தனர்!
கறி அப்படியே இலவம் பஞ்சு போல மென்மையாக வெந்திருந்தது! தாமரை இலை தண்ணீர் போல் எலும்பில் கறி ஒட்டாமலிருந்தது! எலும்பை உறிஞ்சினால் உள்ளிருக்கும் ஜெல்லி “கண்ணடிச்சாலே வந்துடுவேன்” போல வாய்க்குள் நுழைந்தது! மட்டனில் நல்லி எலும்பு மசாலா ஏன் மிகுந்த ருசி என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்தக் கால் எலும்போடு கலந்து சமைப்பதால் தான்! கறியை எப்போதும் எலும்புடன் சமைப்பதே நல்ல ருசியைத் தரும்! ஆட்டுக் கால் சூப் முதல் பாயா வரை மட்டன் எலும்பு வகை க்ரேவிக்கள் சுவை பட கிடைக்க இதுவே காரணம்! நான் ரசித்து சாப்பிடும் அழகை கண்டு நல்லி கிரேவியைக் ஒரு தட்டில் கொண்டு வந்து தந்தனர்!
இன்னொரு ப்ளேட் நல்லியும் நான் சொல்வதற்கு அது காரணமாக இருந்தது! இரண்டாவது வந்த நல்லியின் தலையில் இறைச்சி புட்ட பர்த்தி சாய்பாபா தலை முடி போல புஷ்டியாக இருந்தது! இப்போது சோற்றில் ரசத்துக்கு வந்திருந்தேன்! அந்தத் தக்காளி ரசத்தோடு நல்லிக்கு 10 பொருத்தமும் பக்காவாக பொருந்தியது!
பாகுபலியின் க்ளைமாக்ஸ் போல இறுதியில் வந்த தயிர்ச் சோறு காலகேயரின் படை போல என் இலையெங்கும் பரந்திருக்க மகேந்திர பாகுபலி வீசியெறிந்த குண்டு போல நடுவில் விழுந்த நல்லியெலும்பு அடுத்த சில நிமிடங்களில் தயிர் சோற்றை காலி செய்தது! தயிருக்கும் நல்லி மசாலாவுக்கும் அப்படி ஒரு ருசி!
வாய்க்கும் வயிறுக்கும் நடந்த யுத்தத்தில் சேதாரம் சாப்பிட்ட இறைச்சிக்கு தானே தவிர இரைப்பைக்கு இல்லை என்பதை ஏவ்வ் என்று ஏப்ப நோட்டிஃபிகேஷனில் சொன்னது வயிறு! சேலம் பிருந்தாவன் தெரு டாக்டர் சூடாமணி ஆஸ்பிடல் தாண்டி இருக்கும் ஜுனியர் குப்பண்ணாவில் நான் அனுபவித்தது இது!
❌ டிஸ்கி ❌ உங்க கால் விரலை இழுத்துப் புடிச்சுசொல்றேன் வேறு கிளைகளில் நீங்கள் பெற்ற மோசமான அனுபவங்களை இங்கே கமெண்ட்டில் வந்து க���ட்டவேண்டாம்! ஜுனியர் குப்பண்ணாவுக்கும் எனக்குமே தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இன்னும் உறங்கும் எரிமலையாக எனக்குள் அமிழ்ந்துள்ளது! 🛑
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 16 days ago
Text
🍺 🍻 டாஸ்மாக் கி.பி 2050 🍻🍺
அந்த கட்டிடத்தின் எதிரே நீண்ண்ண்ண்டடடட கியூ நத்தையைப் போல நகர்ந்து கொண்டு இருந்தது.. கட்டிடத்தின் உச்சந்தலையில் டாஸ்மாக் என ஆங்கிலத்திலும் தமிழிலும் லேசர் போர்டு நிறங்களை உமிழ்ந்து கொண்டிருந்தது “ச்சே என்ன பொழப்புடா இது எப்போ நம்ம முறை வந்து எப்போ வாங்கிகிட்டு எப்போ வீட்டுக்கு போவது”
ரவி அலுத்துக் கொண்டான் “சார் என்னமோ நீங்க மட்டும் தான் கஷ்டப்படுறா மாதிரி சொல்றிங்க அப்போ என்னை நினைச்சுப் பாருங்க" என்றான் பின்னாலிருந்தவன் “குவார்ட்டர் 550 ரூபா இருந்துச்சு இப்போ 700 ரூபா ஆயிடுச்சு ஒரு ஆளுக்கு ரெண்டு குவார்ட்டர் மட்டும் தான் அதுவும் ஆதார் கார்டு இருந்தாத் தான்"
‘அநியாயம் சார்’ என்றார் ரவிக்கு முன்னால் நின்றவர் தன்பங்கிற்கு, இதுல கடைகளை வேற குறைக்கப் போறாங்களாம் என்றார், இன்னொருவர் கவலையாக. என் ஒய்ப் மகளிர் டாஸ்மாக்கில் நின்னு இருக்கா ஆனா உரிய ஸ்டாக் இல்லாததால் ஒரு குவார்ட்டர் தான் தந்தாங்களாம் அந்த ஏரியா பெண்கள் பூரா மறியல் பண்றாங்களாம்.
இப்படி ஆளாளுக்கு புலம்ப க்யூ வேகமாக நகர ஆரம்பித்தது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் கள்ளத்தனமாக 4 குவார்ட்டர்கள் பெற்றுக் கொண்டனர். ரவி சேல்ஸ் கவுன்ட்டரை நெருங்கி தன் ஆதார் கார்டையும் டெபிட் கார்டையும் நீட்டினான், ஸ்வைப் செய்து 2 குவார்ட்டர் பாட்டில்களை பில்லோடு தந்தார்கள். கிளிங் என..
மெசஞ்சர் ஒளிர பார்த்தான் அவன் மனைவி தான்! "இப்போ தான் நானும் 2 குவார்ட்டர் வாங்கினேன் வந்து பிக்கப் பண்ணிக்க முடியுமா என லொகேஷன் மேப்போடு செய்தி அனுப்பியிருந்தாள். வர்றேன் என பதிலிவிட்டு, குவார்ட்டர் பாட்டில்களை காரில் பத்திரமாக வைத்து காரை கிளப்பி மனைவி இருக்கும் இடம் போய் சேர்ந்தான்.
அவளும் பாட்டில்களோடு வண்டி ஏறினாள் “அப்பாடா இன்னிக்கு 4 குவார்ட்டர் கிடைச்சதே” என்றான் பெருமிதமாக! ஆமா நீங்களும் ஏதோ பெரிய மல்டி நேஷனல் கம்பெனி ஜெனரல் மேனேஜர், ஏதாவது ஒரு அரசியல்வாதி மூலமா டெய்லி 2 ஃபுல் வாங்க துப்பில்ல 2 ஃபுல் இருந்தா நம்ம குடும்பமே குடிச்சு சந்தோஷமா இருக்கலாமே!
நான் என்ன உங்க கிட்ட நகை நட்டா கேட்டேன்” 2 ஃபுல் தானே என்றாள் கோபத்துடன்.. இரும்மா தெரிஞ்ச சென்ட்ரல் மினிஸ்டர் பி.ஏ. கிட்ட பேசிட்டேன் அடுத்த வாரம் ஒரு சிபாரிசு மெயில் அனுப்பறாராம்! அது கிடைச்சா நமக்கு டெய்லி 2 ஃபுல் கிடைச்சிடும் என்றான். ஹை நிஜமாவா சூப்பர்.. டியர் இந்த சந்தோஷத்தை..
செலிபரேட் பண்ண இப்பவே நாம ஒரு குவார்ட்டர் அடிச்சுடலாமா என்றாள்! ஏய் அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு” நமக்கு அந்த ஃபுல் வந்ததும் பெருசா கொண்டாடலாம், நாட் நவ்.. என்ற போது செல்லில் அழைப்பு கவுதம் என ஒளிர்ந்தது அவர்களது 12 வயது மகன் வீட்டில் இருந்து கூப்பிடுகிறான்.. எடுத்து பேசு என்றான் ரவி.
ஹலோ கவுதம் செல்லம் டாடி மம்மி ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கோம் என்ன கண��ணா வேணும்.? மம்மி குவார்ட்டர் வாங்கிட்டிங்களா நான் குடிக்கணும் சீக்கிரம் வாங்கம்மா" என்றான் தோ 5 மினிட்ஸ் கண்ணா.. வீட்டுக்கு வந்ததும் டாடி மம்மி நீ எல்லாம் சேர்ந்து குடிக்கலாம் என்றவள் போனை அணைத்தாள்!
தனது கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ரவி பதறினான் “ஏய் என்னம்மா ஆச்சு பையன் என்ன சொன்னான்” பாவங்க அவன் எப்போ குவார்ட்டர் வருமுன்னு ஏங்கிக் கேட்டான், இதோ இப்போ வந்துடுறோமுன்னு சொல்லியிருக்கேன், பாவம் பிள்ளைக்கு எவ்வளவு தண்ணி தாகம் இருந்திருந்தா தவிச்சுப் போயி போன் பண்ணியிருப்பான் என்றாள்…
பின்சீட்டில் குவார்ட்டர் பாட்டில்களில் இருந்த குடிநீரும் க்ளிங் எனத் தளும்பி ஆம் என்றது.!
தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசுக்கு அதிக வருவாய் என்பதாலும் மதுவுக்கு பதில் குடிநீரை பாட்டில்களில் அட��த்து டாஸ்மாக்கில் விற்கும் நிலை வந்தால் எப்படி இருக்குமென சிந்தித்ததன் விளைவே இப்பதிவு. 🍺 🍻
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 18 days ago
Text
#சம்பார_தோசை
குறிஞ்சிப்பூ பற்றி உங்களுக்குத் தெரியும்! 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்குமென்று! அதே போல வருடத்தில் 20 நாட்கள் மட்டுமே கிடைக்கும் சம்பார தோசை பற்றித் தெரியுமா? அதென்ன ஓ சாம்போ.. ஓ சாம்போனு அடிக்கடி சொல்றிங்க அவரு யாரு உங்க அப்பாருங்களா என கவுண்டமணி ஜெய்ஹிந்த் படத்தில் கேட்பார்!
அதுபோல் நமக்கு சாம்பார் தோசை தாங்க தெரியும், அது என்னங்க சம்பார தோசை? அப்படியே கொஞ்சம் ஶ்ரீரங்கம் பக்கம் போவோமா! பெருமாள் ஒரு பிரசாதப் பிரியர்! மற்ற கடவுளர்களை விட இவருக்கு படைக்கும் பிரசாதங்களுக்கு தனிப் பட்டியலே உண்டு! அக்கார அடிசில், தஜ்ஜோன்னம் என்கின்ற தயிர்சாதம்..
புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், திருப்பதி லட்டு, மிளகுப் பொங்கல், அடை, கருப்பு உளுந்து வடை, காஞ்சி இட்லி, அழகர் கோவில் தோசை இப்படி அதன் லிஸ்ட் நீளம்! ஏன் பெருமாளுக்கே பிரசாத் என்னும் பெயர் உள்ளதல்லவா! தோசை என்றால் நமது வெங்கடேச பிரசாத்திற்கு கொள்ளை ஆசை!
பெருமாள் பிரசாதங்களில் தோசை முக்கியமானது! அழகர் கோவில் தோசைக்கு முன்னோடி தான் ஶ்ரீரங்கத்தின் சம்பார தோசை! ஏகாதிசி விரதம் இருப்பவர்கள் சாப்பிடுவது! அதுவும் வைகுண்ட ஏகாதிசி சமயத்தில் தான் இது கோவிலில் தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும். திருப்பாவை விரதம் இருப்போரும்..
ஏகாதிசி விரதம் இருப்போரும் சாப்பிடும் வகையில் இதை சமைப்பார்கள். வைணவ மரபில் பகல் பத்து, ராப் பத்து என்றழைக்கப்படும் சமயம் செய்கின்ற தோசை! நெய்விட்டு, சுக்கும், மிளகும், சீரகமும் மண மணக்கும் அற்புத ருசி மிகுந்த தோசை இது! ஶ்ரீரங்கத்தில் மார்கழியில் மட்டுமே கிடைக்கும்!
அக்காரர அடிசில், கண்ணமுது, சாத்தமுது போல இந்த சம்பார தோசையும் ஶ்ரீரங்கத்தின் ஐகான் என்றால் பெருமாள் கோபித்துக் கொள்ள மாட்டார்! சம்பார தோசை ஒரு வட்டமான பீட்ஸாவின் கனத்தில் இருக்கும்! இப்போது இந்தப் பிரசாதத்தை அந்த பீட்ஸாவை போலவே முக்கோணமாக கட்செய்து விற்கிறார்கள்!
வெறும் தோசையையே நெய் கமகமக்க காரமாக சாப்பிடலாம்! சட்னி வகைகள், தொக்கு ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்! ஆழ்வார்கள் அரங்கனின் அருள் வேண்டுவது போல என் போன்ற அற்பர்கள் இந்திரலோகமாளும் அப்பதவி வேண்டாம் சம்பார தோசையே வேண்டும் என்போம்!
மார்கழி வரைக்கும் காத்திருக்க முடியாதுங்க இதை வீட்டிலேயே செய்யலாமா? என்று கேட்பவர்களுக்கு இதன் ரெஸிபி 👇🏿
#சம்பார_தோசை
தேவையானவை : பச்சரிசி - 300 கிராம், கருப்பு உளுந்து - 100 கிராம், மிளகு - 1 tbs, சீரகம் - 1 tbs, சுக்குப் பொடி (dry ginger powder) - 1 tbs, நெய் - 150 கிராம், ஏலக்காய் -2 கறிவேப்பிலை - ஒரு சிறிய சரம், உப்பு - தேவைக்கு.
{பச்சரிசி & கருப்பு உளுந்து மட்டுமே சேர்க்க வேண்டும்! தோசை வார்க்க நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுக்குப் பொடி தான் இந்த தோசைக்கு ஆதாரம்! ஏலக்காய் ஒரு ஆப்ஷன் மட்டுமே}
செய்முறை: அரிசி உளுந்து நன்கு கழுவி தனித்தனியாக 5 மணி நேரங்கள் ஊற வைத்து பின்னர் அதை கிரைண்டரில் ஒன்றாகப் போட்டு மாவை அரைத்துக் கொள்ளவும்! மாவு மிக நைஸாக அரைக்கக் கூடாது சற்று கொர கொரப்பாக இருக்கலாம்! அரைத்த மாவை இரவு முழுவதும் வைத்து புளிக்கவிடவும்.
மறு நாள் மிளகு, சீரக��், ஏலக்காயை இடிக்கவும்! மிக்ஸியில் போட்டு பவுடராக்கிவிடக்கூடாது. ஒன்றிரண்டாக உரலில் இடிப்பது சிறந்தது. தோசை வார்க்கும் முன் மாவில் உப்பு, இடித்த மிளகு, சீரகம், சுக்குப்பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து தேவையான நீர் ஊற்றி அடைதோசை பதத்திற்கு கரைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் நெய் விட்டு அதன் மீது 2 கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும். மாவை வட்டமாக கரண்டியில் தேய்க்க வேண்டாம் கனமாகவே இருக்கட்டும். இதை மூடி போட்டு 2 நிமிடம் வேகவிட்டு, திருப்பி மறுபுறமும் 1 ஸ்பூன் நெய்விட்டு 2 நிமிடம் மூடி வேகவிடவும்.
அவ்வளவு தாங்க பெருமாளுக்கு பிடித்த பிரசாதமான அற்புதமான ஏகாதிசி சம்பார தோசை வீட்டிலேயே தயார்! இன்னொரு விஷயம் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு இந்த தோசை ஒரு நல் மருந்து! இதைச் செய்து ருசித்துவிட்டு சொன்னால் மகிழ்வேன்!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
venkatesharumugam · 20 days ago
Text
#திருச்சி_கல்யாண_பிரியாணி
“KMS ஹக்கீம் பிரியாணி”
மதுரை மேலூருக்கு அருகில் இருக்கும் நெல்லுகுண்டுப் பட்டியை மதுரை மக்களே அதிகம் அறிந்திருக்கமாட்டார்கள்! அந்த ஊரின் பெயருக்கு சிறப்பு சேர்ப்பவர்கள் தான் இந்த KMS ஹக்கீம் கல்யாண பிரியாணி கடைக்காரர்கள்! திண்டுக்கல் பிரியாணிக்கு இணையாக திருச்சியின் பிரியாணிக்கும் ஒரு இடமுண்டு! இந்தச் செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம்! ஆனால் அதுவே மெய்!
திருச்சி புகாரி ஓட்டல் பிரியாணி திருச்சியில் மிகவும் புகழ் பெற்ற பிரியாணியாகும்! இவர்கள் குடும்பத்துக் கடையாக திருச்சி திண்டுக்கல் சாலையில் இனாம் குளத்தூரில் வார இறுதிகளில் இயங்கும் சிவத்தகனி பிரியாணி புகழ் பெற்ற பிரியாணிக் கடைகளில் ஒன்றாகும்! அந்த சிறிய ஊருக்கு பிரியாணி வாங்க கூட்டம் தேன்கூட்டில் குவியும் தேனீக்கள் போல மொய்க்கும்!
இப்போது அந்தக் கடை இருக்கா என்பது தெரியவில்லை! நல்ல பிரியாணிக்கு திருச்சியும் புகழ் பெற்ற ஊர் தான்! இங்கே இந்தக் கல்யாண பிரியாணிக்கடை பற்றி என்னிடம் சொன்ன நண்பர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர்! என்னைப் போலவே ஒரு உணவு ரசிகர்! அவர் பரிந்துரைத்ததால் ஒரு நல்ல நேரத்தில் WB ROAD, KMS பிரியாணிக்கடைக்குள் நுழைந்தேன்!
பசுமையான தோட்டம் போல அலங்கரிக்கப்பட்ட இண்டீரியர்.. இன்ஸ்டா பிரியர்கள் ரீல்ஸ் போடலாம்! இங்கு 2/3 மட்டன் போன் சூப் ஆர்டர் செய்தேன்! என்னுடன் 2 நண்பர்கள் வந்திருந்தனர்! ஒரு அசைவக்கடையில் மட்டன் சூப் என்பது ஒரு சோறு பதம்! ஆம் சூப்பிற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கறியை வைத்தே அவர்களது ரசனையை நாம் அறியலாம். நல்ல சூடான சூப் பரிமாறப்பட்டது!
சூப்பின் மணமும் அதன் கன்ஸிஸ்டன்ஸியுமே சிறப்பாக இருந்தது! உள்ளே கால் மற்றும் நெஞ்செலும்புகளின் கறி இருந்தது! இதுவே மிகச் சிறந்த மட்டன் எலும்பு சூப்புக்கான இறைச்சிகள் ஆகும்! அவர்கள் தந்த அளவும் தரமாக இருந்தது! இறைச்சியோடு மிளகும் உப்பும் தூவி குடித்த சூப் அற்புதமாக இருந்தது! தேங்காய் சில்லு போல எலும்புகளை நன்கு மென்று ரசித்து ருசித்து சாப்பிட்டோம்!
அடுத்து இங்கு என்ன ஸ்பெஷல் என்ற போது KFC சிக்கன் போல KMS சிக்கன் என்றனர். அதில் ஒன்றை ஆர்டரினோம்! வட்டமான கட்லெட் போல தட்டில் 6 துண்டு சிக்கன் எலும்பில்லாமல் ஃப்ரை செய்து மயோனீஸ் உடன் தந்தனர்! நிச்சயம் KFC தரத்திற்கும் மேலேயே ருசியாக இருந்தது! சில்லி டிரை ஃபிஷ் (மாஷா மீன்) ஒன்றும், வஞ்சிரம் மீன் ஃப்ரை ஒன்றும் ஆர்டர் செய்தோம்.
இரண்டு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து 3 பேர் ஷேர் செய்யலாம் என்று நாங்கள் போட்ட திட்டம் பொய்யானது! ஆம்! 3 பிரியாணி ஆர்டர் செய்யும் அளவிற்கு பிரியாணியின் ருசியும், கறிகள் வெந்த பதமும் இருந்தது! பற்றாகுறைக்கு அவர்கள் தந்த கத்திரிக்காய் பருப்பு தால்ஸா அட்டகாசமாக இருந்தது! நாங்கள் ஆர்டர் செய்த மீன் வகைகள் வந்தன! அப்படி ஒரு அபார சூடு + நறுமணம்!
குடை மிளகாய், வெங்காயத்தை மிகப் பதமாக வதக்கி சேர்த்த சில்லி ஃபிஷ் ஒவ்வொரு முறை சுவைக்கும் போதும் இன்பத்தை அள்ளியள்ளி தந்தது! மிதமான கார வஞ்சிரம் ஃப்ரை நேரடியாக மோட்சம் என்பது போல அப்படி ஒரு ருசி! பிரியாணியில் கறிகள் அல்வா போல குழைந்தும் எலும்புகளை லேசாகத் தட்டினாலே உள்ளிருக்கும் ஜெல்லி தனியாக கழன்று தட்டில் விழுந்தது!
கறி பிரியாணிக்கும் அப்படி ஒரு அபாரமான சூடு! இறுதி வரை அது குறையவே இல்லை பிறகு ஒரே ஒரு வெள்ளைச் சோறு வாங்கி அதை மூன்று பேரும் பகிர்ந்து கொண்டு, மீன் குழம்பு, பிறகு ரசம், பிறகு தயிர் என நிறைவு செய்தோம்! இதற்குத் தனியாக 2 ஆம்லெட் ஆர்டர் செய்து அதைத் தொட்டுக் கொண்டு ருசித்தோம்! அங்கே குறை என்றால் அது நீர்த்த தயிர் வெங்காயம் மட்டுமே!
அது கொஞ்சம் திக்காக தந்தால் இவர்களை இந்த ஊரில் அடிச்சிக்க ஆள் இல்லை என்பேன்! 3 பேர் சாப்பிட்டதற்கு 1696/- வந்தது! இந்தத் தொகை வொர்த்! மிகச் சரிதான் என்பேன்!
{முன்னெச்சரிக்கையான டிஸ்கி } நான் இந்த ஒரு மாதத்தில் திருச்சி சிங்காரத் தோப்பு அருகே (WB ROAD) KMS பிராஞ்ச்சில் (டிசம்பர் 4 - ஜனவரி 15 வரை) கிட்டத்தட்ட 8 முறை சாப்பிட்டு அதன் பிறகே இந்தப் பதிவை எனது மனசாட்சிக்கு விரோதமின்றி எழுதுகிறேன்! நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் இந்தக் கடையில் உணவுகள் அவ்வளவு நல்லா இருக்காது.. இங்கே விலை அதிகம்..
இது எளிய மக்களுக்கான கடை அல்ல.. என நீங்கள் சொன்னால் அது உங்களது விருப்பம் என்பேன்! உனக்கென்னப்பா நீ அவங்க கிட்ட காசு வாங்கிட்டு எழுதறியான்னு அபத்தமா கேட்டா ஆமாம் 3000 கோடி தந்தால் மட்டுமே எழுதுவேன்! இந்தத் தொகை தான் ஒரு ஓட்டலை ஆதரித்து ரிவ்யூ எழுத எனது கட்டணமாகும்! வேறு கிளைகளில் உங்களுக்குக் கிடைத்த கெட்ட அனுபவங்களை..
இந்தப் பதிவில் வந்து கொண்டு வந்து கொட்டவேண்டாம்! எந்த ஓட்டலிடமும் பணம் பெற்றுக் கொண்டு ரிவ்யூ எழுதும் அளவில் கடவுள் என்னை வறுமையில் வைத்திருக்கவில்லை! இது எனது மனசாட்சியோடு எழுதப்பட்ட உண்மைப் பதிவு என்பதை மீண்டும் ஒரு முறை இங்கு உறுதியளிக்கிறேன்! உங்கள் புரிதலுக்கு நன்றி!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note